சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மகளிர் காவலர் விடுதி

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 200 பெண் போலீசார் தங்கும் வகையில் மகளிர் காவலர் விடுதியை கட்ட ரூ.9.73 கோடி ஒதுக்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.;

Update:2023-07-22 12:55 IST

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கையாள்வதில் காவல் துறைக்கு உதவி செய்யும் முதன்மை நோக்கத்துடன் 1973-ம் ஆண்டில் மகளிர் காவல் பிரிவு நிறுவப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தச் சூழல் மிகவும் மாறி உள்ளது. சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளில் மகளிர் காவல் துறையினர் திறம்பட செயலாற்றி வருகின்றனர்.

மாநிலத்தில் தற்போது 222 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தாலுகா காவல் நிலையத்திலும் குறைந்தது ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பெண் தலைமை காவலர்கள் பணியில் உள்ளனர். தமிழ்நாடு காவல் துறையில் 2023-ம் ஆண்டு, மகளிர் காவலர்களின் பொன்விழா ஆண்டை குறிக்கிறது.

தமிழ்நாடு காவல்துறையில் மகளிரின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சிந்தாதிரிப்பேட்டையில் 200 பெண் போலீசார் தங்கும் வகையில் மகளிர் காவலர் விடுதி கட்டப்படும் என்றும் இந்த வசதி பெண் போலீசார் சென்னைக்கு பணியிட மாறுதல் பெற்று வரும்போதெல்லாம், அவர்களுக்கு அரசு குடியிருப்புகள் கிடைக்கும் வரை அல்லது சொந்தமாக வாடகைக்கு தங்கும் விடுதியை ஏற்பாடு செய்யும் வரை தங்கும் இடமாக பயன்படுத்தலாம் என்றும் சட்டசபையில் 2023-2024-ம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்-அமைச்சர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 200 பெண் போலீசார் தங்கும் வகையில் மகளிர் காவலர் விடுதியை அமைக்க ரூ.9 கோடியே 73 லட்சத்து 24 ஆயிரம் நிதி வழங்குவதற்கு தற்போது நிர்வாக ஒப்பளிப்பு செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், சென்னைக்கு பணியிட மாறுதலில் வரும் பெண் போலீசாருக்கு இம்மகளிர் காவலர் விடுதி பேருதவியாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்