மகளிர் உரிமைத் தொகை திட்டம்: கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் - உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என்று உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி வருகிற செப் டம்பர் 15-ந் தேதியில் இருந்து மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற யார்-யார் தகுதியானவர்கள் என்ற விதிமுறைகளையும் அரசு வெளியிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ரேஷன் குடும்ப அட்டை வாரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட உள்ளது. இந்த பணியை மேற்கொள்ள ரேஷன் கடைக்காரர்களுடன் இணைந்து பணியாற்ற தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என்று உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் 17ம் தேதிக்குள் அனைத்து நியாய விலை கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என துணை ஆணையர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்து நியாய விலை கடைகளிலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். உரிமைத் தொகை திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம். கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவிகள் சேகரிக்கப்பட்டு, 17 ஜூலை 2023 அன்று அல்லது அதற்கு முன் பணி நிலையில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு கைரேகை பதிவு செய்யும் கருவிக்கும் அதன் சொந்த வரிசை எண் (ஐடி) உள்ளது. எனவே கைரேகை பயனாளர்களின் பட்டியலை கடை குறியீடு மற்றும் கைரேகை ரீடரின் தொடர்புடைய வரிசை எண்ணுடன் தயார் செய்து, அது மீண்டும் அதே கடைக்கு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.
துணை ஆணையர்கள் (வடக்கு மற்றும் தெற்கு)/ மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளின் வழக்கமான கண்காணிப்பு பயோமெட்ரிக் ஸ்கேனர்களின் சரியான செயல்பாட்டை உறுதி செய்வதற்கும், அது வேலை செய்யும் நிலையில் திரும்புவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.