மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி

சங்கரன்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-06-15 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை அஞ்சலக அதிகாரி முத்துமாரி தலைமை தாங்கினார். உதவி தலைமை அஞ்சலக அதிகாரிகள் மகேஸ்வரன், கோமதிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி கலந்து கொண்டு மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரங்களை வழங்கினார்.

இதுகுறித்து அஞ்சலக அதிகாரிகள் கூறுகையில், 'இந்த திட்டமானது மகளிர் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இதில் 2 வருடங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்தால் 2 வருடம் கழித்து 7.5 சதவீத வட்டியுடன் பணம் திரும்ப கிடைக்கும். ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். முதல் கணக்கு தொடங்கி 3 மாதம் ஆன பிறகு தான் அடுத்த கணக்கு தொடங்க முடியும். இந்த சேமிப்பில் ஒரு வருடம் கழித்து 40 சதவீத பணத்தை எடுத்துக் கொள்ளலாம். கணக்கு தொடங்கப்பட்டு 6 மாத காலத்தில் கணக்கை முதிர்வு செய்தால் வட்டி குறைத்து 5.5 சதவீதம் வழங்கப்படும். கணக்கு வைத்து இருப்பவர்கள் இறந்தாலோ அல்லது அவர்களது பாதுகாவலர்கள் இறந்தாலோ, கணக்கு வைத்திருப்பவர்கள் நோய்வாய்ப்பட்டாலோ உரிய ஆவணங்களை கொடுத்து 7.5 சதவீத வட்டியுடன் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்' என்று தெரிவித்தனர். நிகழ்ச்சியில், நகராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ், மாரிசாமி, இளைஞரணி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்