குளத்தில் சவுடு மண் அள்ளுவதை கண்டித்து பெண்கள் முற்றுகை போராட்டம்
குளத்தில் சவுடு மண் அள்ளுவதை கண்டித்து பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளனூர் ஊராட்சி, கொள்ளுமேடு நத்தை குட்டை என்ற குளத்தை மத்திய அரசு திட்டத்தின் கீழ் தூர்வார டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. 1 மீட்டர் அளவு தான் தூர் வாரவேண்டும் என்ற அரசு விதியை மீறி, ஒப்பந்ததாரர் சுமார் 5 மீட்டர் வரை தூர்வாரி, தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் சவுடு மண்ணை அள்ளி தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், அளவுக்கு அதிகமாக சவுடு மண் அள்ளுவதை கண்டு தூர்வாரப்படும் அந்த குளத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.