கொத்தனார் பயிற்சி பெற்று அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பெண்கள்

திருப்புல்லாணி அருகே கொத்தனார் பயிற்சி பெற்ற பெண்கள் அரசின் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியை செய்து வருகின்றனர்.;

Update: 2023-01-24 18:34 GMT

திருப்புல்லாணி அருகே கொத்தனார் பயிற்சி பெற்ற பெண்கள் அரசின் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியை செய்து வருகின்றனர்.

திறன் பயிற்சி

திருப்புல்லாணி யூனியன் தாதனேந்தல் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சமுதாயத்திறன் பள்ளியின் மூலம் பெண்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்ற 30 பெண்களுக்கு கொத்தனார் தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதனை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இப்பகுதியை சேர்ந்த 30 பெண்களுக்கு கொத்தனார் தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கட்டிடம் கட்டுதல், கம்பி கட்டுதல், சிமெண்ட் உரை தயாரித்தல், சிமெண்ட் செங்கல் தயாரித்தல் மற்றும் ஹாலோ பிளாக் கல் தயாரித்தல் போன்ற பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி பெற்ற பெண்கள் யார் உதவியும் இன்றி தனியாக கட்டிடம் கட்டும் அளவிற்கு பயிற்சி பெற்று உள்ளனர்.

இந்த பெண்கள் குழுவினர் ஒருங்கிணைந்து கட்டிடம் கட்டவும், சிமெண்டு செங்கல், ஹாலோ பிளாக் கல் தயாரித்தல் போன்ற பணிகளை செய்து பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள இந்த பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். மாவட்டத்தில் திருப்புல்லாணி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, மண்டபம் ஆகிய யூனியன்களை தேர்வு செய்து 143 கிராமங்களை சேர்ந்த 1362 பெண்களை உறுப்பினராக தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி கட்டிடம்

இதுவரை கடல் சிப்பி, கைவினை பொருள் தயாரித்தல், படகு மற்றும் டூவீலர் பழுது நீக்கும் பயிற்சி, எலக்ட்ரீசியன் பயிற்சி, பிளம்பர் பயிற்சி மற்றும் வேளாண்மை குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கொத்தனார் தொழில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி பெற்ற பெண்களுக்கு அரசின் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் பாஸ்கரன், யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமநாதபுரம் ரமேஷ் குமார், திருப்புல்லாணி ராஜேந்திரன், கணேஷ் பாபு, உதவி திட்ட அலுவலர் கீர்த்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்