ஈரோட்டில் போலீஸ் நிலையம் முன்பு பெண்கள் திடீர் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

ஈரோட்டில் போலீஸ் நிலையம் முன்பு பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-10-04 23:06 GMT

ஈரோட்டில் போலீஸ் நிலையம் முன்பு பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மகளிர் சுயஉதவிக்குழு

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மகளிர் சுயஉதவிக்குழு தலைவியாக உள்ளார். இவர் குழு உறுப்பினர்களுக்கு வங்கியில் இருந்து கடன் வாங்கி கொடுத்து உள்ளார். மாத தவணை அடிப்படையில் பெண்களிடம் இருந்து அவர் பணத்தை வசூலித்து வங்கியில் செலுத்தியும் வந்துள்ளார். ஆனால் கடந்த சில வாரங்களாக அவர் வங்கியில் பணத்தை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகரிடம் மகளிர் சுயஉதவிக்குழு தலைவி நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த அவர் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த தகவல் கிடைத்ததும் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். அப்போது மகளிர் சுயஉதவிக்குழு தலைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் போலீசாரிடம் முறையிட்டனர்.

சாலை மறியல்

இந்தநிலையில் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையம் முன்பு பவானி ரோட்டில் பெண்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "மகளிர் சுயஉதவிக்குழு தலைவி எங்களிடம் இருந்து கடனுக்கான மாத தவணை தொகையை பெற்றுக்கொண்டார். ஆனால் அவர் வங்கியில் செலுத்தவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள் எங்களை தொடர்பு கொண்டு கடனை செலுத்துமாறு கட்டாயப்படுத்துகின்றனர். எனவே தலைவியின் வீட்டுக்கு சென்று முறையிட்டோம். அதன்பிறகு அவர் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாகி விட்டார். எனவே அவா் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்", என்றனர்.

அதற்கு போலீசார், "எத்தனை பேரின் பெயர்களில் வங்கி கடன் வாங்கப்பட்டு உள்ளது? எவ்வளவு பணம் வங்கியில் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது? போன்ற விவரங்களை தெரிவியுங்கள். தொடர்ந்து வங்கி அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்", என்று போலீசார் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டதை கைவிட்டு பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக ஈரோடு பவானி ரோட்டில் நேற்று சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்