கிராமிய பாடல் பாடி நடவு பணியில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள்
கிராமிய பாடல் பாடி நடவு பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.;
நடவு பணி
திருச்சி மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. தற்போது மழை பெய்யாத நிலையில் விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் நடராஜபுரம் கிராமத்தில் உள்ள வயலில் நேற்று நடவு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் குலவை பாட்டு, கிராமிய தெம்மாங்கு பாட்டு பாடியபடி நடவு பணிகளை மேற்கொண்டனர்.
களைப்பு தெரியாது
இது குறித்து அந்த பெண் தொழிலாளர்களிடம் கேட்டபோது, இவ்வாறு பாடல்கள் பாடி நடவு பணியை மேற்கொள்வதன் மூலம் களைப்பு தெரியாது. மேலும் உற்சாகத்துடன் நடவு பணியை மேற்கொள்வோம், என்றனர்.
களை எடுப்பு
இதேபோல் உப்பிலியபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் இப்பகுதிகளில் சம்பா பருவ பயிர்களான நாட்டு சீரகம், மருதுவான், அட்சயப்பொன்னி, வெள்ளைப்பொன்னி, ஆர்.என்.ஆர். 15048, பி.பி.டி. 5204 நெல் ரகங்களும், பாரம்பரிய நெல் வகைகளான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, இலுப்பை பூ சம்பா முதலிய நெல் ரகங்களும் பயிரிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் முதல் களையெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் அவர்கள் நெற்பயிர்களிடையே வளர்ந்த புல்லம் பயிர், குதிரை வாலி, மூஞ்சாபுல், நீரடிப்புல், திப்பராகி, நாணல், காகாகால் பூண்டு, வக்காபுல், வட்டகோரை, பூக்கோரை, சீப்பன் கோரை, மஞ்சள் கோரை, ஆலக்கீரை, முல்லிக்கீரை, ஆப்பக்கொடி, நண்டுகண்ணு, கானா வாழை, பருப்புக்கீரை, ஆகாயத்தாமரை, கால் உருவி முதலான களைகளை அகற்றினர்.