கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தகுதி உடையவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தகுதி உடையவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Update: 2023-07-30 10:59 GMT

கலசபாக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தகுதி உடையவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

அமைச்சர் ஆய்வு

கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட துரிஞ்சாபுரம் ஒன்றியம் ஊசாம்பாடி கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளை தேர்வு செய்ய விண்ணப்பம் பெறும் முகாமிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதேபோல் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் நாங்கள் ஆட்சி அமைத்தால் ஏழை, எளிய பெண்கள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் உரிமைத்தொகை தருவோம் என வாக்குறுதி அளித்திருந்தார்.

.அதனை நிறைவேற்றும் வகையில் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

தகுதி உள்ளவர்களுக்கு

இந்த திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளை தேர்வு செய்வதற்காக ஒவ்வொரு ஊராட்சிகளிலும் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை கடந்த 2 தினங்களாக மாவட்டம் முழுவதும் தொகுதி வாரியாக நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறேன்.

இந்த திட்டத்தில் தகுதி உடையவர்களுக்கு கட்டாயம் பணம் கிடைக்கும். தகுதி இருந்தும் பணம் கிடைக்கவில்லை என்றால் மாவட்டத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் சென்று மேல் முறையீடு செய்யலாம்.

உங்கள் விண்ணப்பங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதி இருந்தால் உடனடியாக பணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். தகுதி உள்ளவர்களுக்கு கட்டாயம் கலைஞர் மகளிர் உரிைமத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், அண்ணாதுரை எம்.பி., பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் ராமஜெயம், வக்கீல் சுப்பிரமணியன், சிவக்குமார், கலசபாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகர், துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு குழுத்தலைவர் தமயந்தி ஏழுமலை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்