மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க அலைமோதிய பெண்கள்

கோத்தகிரி தாசில்தார் அலுவலக இ-சேவை மையத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க பெண்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது அவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-26 20:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி தாசில்தார் அலுவலக இ-சேவை மையத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க பெண்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது அவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மகளிர் உரிமைத்தொகை

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்ததில் சிலருக்கு உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. அவர்களது விண்ணப்பம் என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என்பது குறித்து, விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வருகிறது.

அதில் கார் வைத்திருப்பது, சொந்து அதிகம் இருப்பது, மின்சாரம் அதிகம் பயன்படுத்தியது, வருமான வரி செலுத்துவது, வருமான வரி தாக்கல் செய்வது என பல்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன.

இதற்கிடையில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத தகுதியானவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் அவர்கள் இ-சேவை மையங்கள் வழியாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி கடைசி நாள் என்பதால், இ-சேவை மையங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் தனியார் இன்டர்நெட் மையங்களில் பெண்கள் குவிந்து வருகின்றனர்.

தள்ளுமுள்ளு

சில நேரங்களில் ஒரே மையத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு விடுவதால் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இதேபோல தான் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் நேற்று காலை முதலே மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் இ-சேவை அங்கு ஒருவிதமான பதற்றமான சூழ்நிலை நிலவியதால், இதுகுறித்து அலுவலக ஊழியர்கள் கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுமான்கான், ரமேஷ் மற்றும் போலீசார் பொதுமக்களை வரிசையில் நிற்க வைத்தனர். இதையடுத்து பெண்கள் வரிசையாக வந்து மகளிர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று ஒரே நாளில் 200 ேபர் விண்ணப்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல தாசில்தார் அலுவலக உதவி மையத்திலும், தனியார் இ-சேவை மையங்களிலும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்