ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் கட்டணமின்றி பெண்கள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் ஷஜீவனா தகவல்
ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் கட்டணமின்றி பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.;
ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் கட்டணமின்றி பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்துவது குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் ஆலோசனை கூட்டம், தேனி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற தகுதிகள் மற்றும் தகுதியின்மை குறித்து விரிவான மற்றும் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வகுத்து தந்துள்ளது. இத்திட்டம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்காக அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளின் மூலம், முகாம் நடைபெறுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேனி மாவட்டத்தில் 517 ரேஷன் கடைகள் உள்ளன. இக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை பணியாளர்களால் வீடு, வீடாக சென்று நேரில் வழங்கப்பட உள்ளது. இந்த விண்ணப்ப படிவங்களை உரிய முறையில் முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன், வழங்கப்படும் டோக்கனில் தெரிவிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்
விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்பட்டுள்ளதை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் குடும்ப தலைவிகள், முகாம் நடைபெறும் இடத்துக்கு செல்லும்போது, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் மின்சார கட்டண ரசீது ஆகிய 4 வகையான அடையாள அட்டைகளை அசலாக எடுத்து செல்ல வேண்டும்.
விண்ணப்பத்தோடு எந்தவிதமான ஆவணங்களின் நகலினையும் இணைக்க தேவையில்லை. அதேபோல் இந்த திட்டத்தில் கட்டணமின்றி பெண்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சரிபார்த்திட விண்ணப்பப் பதிவு மையங்களுக்கு அருகில் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
கட்டுப்பாட்டு அறை
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவு மையங்களுக்கு சென்றவுடன் உதவி மையங்களில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட பின் விண்ணப்பப் பதிவு பணியாளரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தனது ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண் கொண்ட செல்போனை கையில் எடுத்து செல்வது விண்ணப்பத்தினை பதிவு செய்வதை எளிதாக்கும். மேலும், இத்திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 0454-250101 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மதுமதி, மகளிர் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர் ராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து, ஆர்.டி.ஓ.க்கள் பால்பாண்டி, முத்துமாதவன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.