மயக்கும் குரலில் அழைக்கும் பெண்கள்; செல்போன்கள் மூலம் நூதன மோசடி

ஹலோ... உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வேண்டுமா? வீடு-மனை வேண்டுமா? நகைக்கடன் தேவையா?... என்பது போன்ற தகவல்கள் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாகவும், அழைப்புகளாகவும் அன்றாடம் வருகின்றன.

Update: 2023-03-14 18:58 GMT

ஆதரவற்றோர் இல்லம்

ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து பேசுகிறோம், 'உங்களால் முடிந்த பண உதவிகளை இந்த வங்கி கணக்கில் செலுத்துங்கள்' என்பது போன்ற அழைப்புகளும் அடிக்கடி வருகின்றன. 'சென்னைக்கு மிக அருகே குறைந்த விலையில் சகல வசதிகளுடன் வீட்டுமனை. உடனே முந்துங்கள்' போன்ற குரல் பதிவு அழைப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.

அதுமட்டும் அல்ல வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்கள் ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி வங்கி கணக்கு விவரங்களை பெற்று, செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. எண்ணை வாங்கி அப்பாவி மக்களிடம் நூதன முறையில் பணம் பறிக்கும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன.

மெகா பரிசு

அதேபோன்று 'உங்கள் செல்போன் எண்ணுக்கு மெகா பரிசு விழுந்துள்ளது. இந்த லிங்கை திறந்து பாருங்கள்' என்று குறுந்தகவல் அனுப்பி அதன் மூலம் ஒரு நொடியில் வங்கி கணக்கில் இருந்து பணம் 'அபேஸ்' செய்யப்படுகிறது.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பர்னிச்சர் கடை உரிமையாளர் கார்த்திகேயன் 'ஆன்லைன்' பண மோசடி கும்பல் அனுப்பிய லிங்கை தொட்டு ரூ.65 ஆயிரத்தை பறிகொடுத்தார். அவரிடம் 'ஆன்லைன்' மூலம் சோபா, மேஜை, கட்டில் வாங்குவதாக கூறி இந்த நூதன மோசடி அரங்கேறியது.

விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப 'சைபர்' குற்றங்களும் புதுப்புது வடிவங்கள் எடுத்து வருகின்றன. 'சைபர்' குற்றங்களை தடுப்பது போலீசாருக்கு சவாலாக இருக்கிறது. இதுபோன்ற அழைப்புகள், மோசடி குறுந்தகவல்கள் முதலில் மனதை மயக்குவதாக இருந்தாலும் இறுதியில் மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. இதுகுறித்து பொதுமக்களின் ஆதங்கம் வருமாறு:-

கூரியர் சர்வீஸ் செல்போன் எண்

ஆன்லைனில் பணத்தை இழந்தவர்:- கூரியர் சர்வீஸ் தொடர்பாக புகார் தெரிவிக்க வலைத்தளத்தில் தொடர்பு எண்ணை தேடிபார்த்தேன். அதில் இருந்த ஒரு செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது எனது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புவதாகவும், அதில் உள்ள லிங்கை கிளிக் செய்யுமாறு கூறினர். நானும் அதனை கிளிக் செய்து பார்த்தேன். ஒரு எண்ணுக்கு ரூ.5 மட்டும் கூகுள் பே செலுத்த கூறினர். நானும் பணத்தை செலுத்தினேன். அதன்பின் சிறிது நேரத்திற்கு பிறகு எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் வரை பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக வங்கி சென்று விவரம் கேட்டேன். அதன்பின் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தேன்.

குறைந்த வட்டியில் கடன்

அரிமளம் ஒன்றியம் கடியாப்பட்டியில் மளிகை கடை நடத்தி வரும் ஜமால்:- செல்போன் மூலம் பேசி மோசடியில் ஈடுபடும் நபர்களை நம்பி மக்கள் ஏமாறக்கூடாது. கவர்ச்சிகரமான பல்வேறு வாக்குறுதிகளை செல்போன் மூலம் கூறி மக்களை எளிதில் மயக்கி விடுகின்றனர். இதனால் பாமர மக்களும், படித்தவர்களும் ஏமாந்து பல லட்சங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறைந்த வட்டியில் பல்வேறு கடன்களை தருகிறோம் என ஆசை வார்த்தை கூறி அப்பாவி மக்களை சுரண்டுகின்றனர். மக்கள் ஏமாறும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அறிமுகம் இல்லாத, தெரியாத நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடாது. மேலும் மெகா பரிசு விழுந்துள்ளது போன்ற தகவலோ, ஆன்லைன் லிங்கோ வந்தால் நாம் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எனக்கும் இது போன்ற பல்வேறு அழைப்புகள் முன்பெல்லாம் வரும். ஆன்லைன் லிங்கை தொட்டால் 1 லட்சம் பரிசு கிடைக்கும் என குறுஞ்செய்திகள் எல்லாம் வரும். நான் அதை எப்போதும் ஒரு பொருட்டாக நினைப்பதே இல்லை. அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடன் வேண்டுமா எனக்கேட்பவர்களிடம் எனக்கு எதுவும் தேவையில்லை. தொந்தரவு செய்யாதீர்கள் என அழைப்பை துண்டித்து விடுவேன். இதுபோல் விழிப்போடு இருந்தால் நாம் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த பணத்தை காப்பாற்ற முடியும்.

செல்போன் எண்கள் சேகரிப்பு

புதுக்கோட்டையை சேர்ந்த கணேசன்:- எனது செல்போன் எண்ணிற்கு இதுபோன்ற மெசேஜ்கள் வரும். நான் அதனை கிளிக் செய்து பார்ப்பதில்லை. ஏற்கனவே இதுபோன்று மோசடி பற்றி கேள்விபட்டதால் சற்று சுதாரித்து கொண்டேன். சம்பந்தமே இல்லாமல் சென்னையில் இருந்து பேசுவதாகவும், அன்னதானத்திற்கு உதவுமாறும் கேட்கின்றனர். பொதுமக்களின் செல்போன் எண்ணை மொத்தமாக சேகரித்து இதுபோன்று மோசடியில் ஈடுபடுகின்றனர். இந்த எண்களை எங்கிருந்து அவர்கள் பெறுகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.

முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

பொன்னமராவதியை சேர்ந்த இல்லத்தரசி சீதா:- மகளிர் குழு மூலம் குறைந்த வட்டிக்கு பணம் தருகிறோம். எனவே உங்கள் ஆதார் எண்ணை தாருங்கள் என்று கூறுகிறார்கள். அதன் பிறகு வங்கி கடனுதவி பெற ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறி அதனை உடடியாக அனுப்பி வைக்குமாறு கூறுகிறார்கள். பிறகு அந்த பணத்தை பெற்றுக்கொண்டு எந்தவித கடனுதவியும் பெற்றுத்தராமல் ஏமாற்றி விடுகிறார்கள். மேலும் உங்களுடைய செல்போன் எண்ணுக்கு மெகா பரிசு விழுந்துள்ளது. உங்களது வங்கி கணக்கு எண் இதுதானே என்று கூறி ஓ.டி.பி. எண்ணை அனுப்புகிறார்கள். அந்த எண்ணை பெற்றுக்கொண்டு நமது வங்கி கணக்கில் சிறுக சிறுக நாம் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை மொத்தமாக சுருட்டிக்கொண்டு தப்பி விடுகிறார்கள். முன்பெல்லாம் இது போன்ற மோசடிகளை ஆண்கள் தான் செய்வார்கள். தற்போது பெண்களும் இது போன்ற மோசடிகளில் ஈடுபடுகின்றனர். ஆண்களை பெண்கள் மயக்குவதும், பெண்களை ஆண்கள் மயக்குவதும் என வாடிக்கையாகிவிட்டது. வசீகர குரலில் பேசி பல மோசடிகளில் ஈடுபடும் கும்பலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

விழிப்புடன் இருக்க வேண்டும்

கீரனூர் மளிகைக்கடை ஊழியர் தங்கராசு:- மர்ம ஆசாமிகள் செல்போன்களில் குறைந்த வட்டியில் பணம் தருவதாகவும், வீட்டுமனை, நகைக்கடன் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி பொதுமக்களை மூளைச்சலவை செய்து பணம் பறித்து விடுகிறார்கள். மேலும் கடன் தருவதாக கூறுபவர்கள் குறிப்பிட்ட தொகையை நடைமுறை கட்டணமாக செலுத்த வேண்டும் எனக்கூறி பணத்தை பெற்றுக்கொண்டு அதன்பிறகு செல்போன் தொடர்பை துண்டித்து விடுகிறார்கள். இதனால் நாம் செலுத்தும் பணம் பறிபோய்விடுகிறது. எனவே பொதுமக்கள் மெகா பரிசு கிடைத்திருப்பதாக கூறும் மர்ம ஆசாமிகளின் ஆசைவார்த்தைகளை நம்பாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

குறுஞ்செய்தி

மலைக்குடிப்பட்டியை சேர்ந்த ஹேமலதா:- அறிமுகம் இல்லாதவர்களிடம் வங்கி கணக்கு எண், ஆதார் எண்களை கொடுக்கக்கூடாது. வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு எண், ஆதார் எண்களை கேட்க மாட்டார்கள். காரணம் வாடிக்கையாளரின் அனைத்து விவரங்களும் வங்கியில் இருக்கும். தேவை என்றால் அவர்களிடம் இருக்கும் சான்றிதழ்களை பார்த்துக்கொள்வார்கள். எனவே வங்கியில் இருந்து பேசுவதாக கூறுபவர்களிடம், நேரில் வாருங்கள் என்று கூறினால் அதன் பிறகு அவர்கள் மீண்டும் தொடர்பு கொள்ள தயங்குவார்கள். மேலும் வங்கியில் இருந்து வரும் குறுஞ்செய்திக்கும் (எஸ்.எம்.எஸ்.), மோசடி செய்பவர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்திக்கும் வித்தியாசம் இருக்கும். அதை வைத்தே மக்கள் எது உண்மையானது, எது பொய்யானது என்று தெரிந்து கொள்ளலாம். எனவே போலி நபர்களிடம் இருந்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மயக்கும் குரலில் அழைப்பு

சில அழைப்புகளில் பேசும் பெண்கள், 'எங்கள் நிறுவனத்தின் ஆயுர்வேத 'செக்ஸ்' மாத்திரையை பயன்படுத்தினால் நீண்ட நேரம் உல்லாசமாக இருக்கலாம் என்று கொஞ்சும் குரலில் பேசி ஆண்களை மயக்கி விடுகிறார்கள்.

சபலம் அடையும் ஆண்கள் அவர்கள் கேட்கும் மருந்து விலையை 'ஆன்லைன்' பரிவர்த்தனை வழியாக அனுப்பி விடுகிறார்கள். ஆனால் பார்சல் வரும். மருந்து வீரியம் இல்லாமல் ஏமாந்து போகிறார்கள். மயக்கும் குரலில் மயங்கி பணத்தை இழந்து விடுகிறார்கள்.

இதேபோன்று மசாஜ் செய்ய வேண்டுமா? பெண்ணின் பெயரை போட்டு இந்த எண்ணை அழையுங்கள் என்று வரும் சில குறுந்தகவல்களை நம்பி செல்லும் ஆண்களிடம் அதிக பணம் பறிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

டேட்டா கார்னர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் கடந்த 2022-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மொத்தம்-16

பணம் மோசடி தொகை ரூ.2,51,71,401

பணம் மீட்பு-11,52,679

பணம் நிறுத்தி வைப்பு-51,73,699

2023-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வரை மொத்தம் வழக்குகள் பதிவு-8

பணம் மோசடி தொகை-ரூ.51,40,504

பணம் மீட்பு-ரூ.90,000

பணம் நிறுத்தி வைப்பு-ரூ.56,52,950.

புகாருக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்

ஆன்லைன் மோசடி மற்றும் சைபர் கிரைம் தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண்- 1930.

இணையதள முகவரி-www.cybercrime.gov.in

Tags:    

மேலும் செய்திகள்