100 நாள் வேலை கேட்டு திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

100 நாள் வேலை கேட்டு திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர்

Update: 2023-01-05 20:50 GMT

திருமங்கலம், 

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மறவன்குளம் பஞ்சாயத்து வையம்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மறவன்குளம் மற்றும் வையம்பட்டி கிராமத்தை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் வையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

வையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டிற்கு 15 முதல் 20 நாட்கள் மட்டுமே பணிகள் வழங்கப்படுவதாகவும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் இல்லாததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக பெண்கள் கூறும் போது. 100 நாள் வேலை திட்டத்தில் தங்களுக்கு சரிவர வேலை வழங்கவில்லை. ஆண்டிற்கு 15 நாட்கள் அல்லது 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்குகிறார்கள். வாரத்திற்கு 6 நாட்கள் வேலை பார்த்தால் 4 நாட்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகவும் ரூ.280 ஊதியத்திற்கு 200 ரூபாய் மட்டுமே வழங்குகிறார்கள். ஆதலால் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்றும் ஊதியம் முறையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றனர். இதை தொடர்ந்து அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்