பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.
காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது ஆலத்தூர் தாலுகா, கொட்டரை கிராமத்தை சேர்ந்த பெண்கள் பரஞ்ஜோதி என்பவர் தலைமையில் தலையில் காலிக்குடங்களை சுமந்து வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. மேலும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொட்டரை நீர் தேக்கத்தில் உரிய பாதுகாப்பு வசதி இல்லாததால், அங்கு குளிப்பதற்கு கூட பயமாக இருக்கிறது.
குடிநீர் பிரச்சினை
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் குடிநீர் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. தொடர் கதையாகி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.
மேலும் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களில் சிலரை மட்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க அழைத்து சென்றார். அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
பணமோசடி
இதேபோல் குன்னத்தில் சீட்டு கம்பெனி வைத்து நடத்துவதாகவும், குறுகிய காலத்தில் அதிக பணம் பெறலாம் என்றும் ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆய்க்குடி, பரவாய், கொளப்பாடி, நன்னை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து சிலர் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர் தாலுகா, சிறுவாச்சூர் தெற்குத்தெருவில் வசித்து வரும் ராஜாவின் மனைவி பழனியம்மாள் தனது 3 குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில் சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எனது மூத்த மகள் 11-ம் வகுப்பும், மகன் 9-ம் வகுப்பும், 2-வது மகள் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். அவர்களுக்கு சாதி சான்றிதழ் இல்லை. இதனால் அவர்கள் பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாது என்று கூறப்படுகிறது. மேலும் இந்து ஆதியன் சாதியை சேர்ந்த எங்களுக்கு, அதே பெயரில் எனது குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
பாலம் கட்ட வேண்டும்
வேப்பந்தட்டை தாலுகா, அய்யர்பாளையம் காட்டு கொட்டாயில் வசிக்கும் பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில், எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகளின் வயல்கள் செம்மண்குட்டையில் உள்ளது. அங்கு செல்ல வேண்டும் என்றால் வக்கனாபுரி ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். தற்போது ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் விளை பொருட்களையும், பால் உற்பத்தியாளர்கள் கறந்த பாலையும் ஆற்றை சிரமத்துடன் கடந்து அய்யர்பாளையத்துக்கு கொண்டு வருகின்றனர். இல்லையென்றால் அ.மேட்டூர், விஜயபுரம் சென்று அய்யர்பாளையத்துக்கு சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் சிரமத்துடன் ஆற்றை கடந்து அய்யர்பாளையத்துக்கு வந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அய்யர்பாளையம் வக்கனாபுரி ஆற்றின் குறுக்கே அரசு சார்பில் பாலம் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க கலெக்டர் வலியுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 265 மனுக்களை கலெக்டர் பெற்றார்.