குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் முற்றுகை
குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை;
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா நயினார்கோவில் யூனியன் ஆட்டாங்குடி ஊராட்சி குணங்குளம் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் கோவிந்தம்மாள் என்பவரது தலைமையில் காலிக்குடங்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- குணங்குளம் கிராமத்திற்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காவிரி குடிநீர் வரவில்லை. ஆட்டாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மற்ற பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால், குணங்குளத்திற்கு மட்டும் தண்ணீர் வருவதில்லை. இதுகுறித்து ஊராட்சி தலைவரிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. அருகில் உள்ள ஆட்டாங்குடியில் நல்ல தண்ணீர் ஆதாரம் இருந்தும் தர மறுக்கிறார்கள். எனவே, குணங்குளத்திற்கு என தனியாக ஆழ்துளை கிணறு அல்லது கிணறு அமைத்து பைப்லைன் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.