100 நாள் வேலை கேட்டு திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
100 நாள் வேலை கேட்டு திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
திருமங்கலம்,
100 நாள் வேலை கேட்டு திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
முற்றுகை
திருமங்கலம் அருகே மறவன்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது சின்ன மறவன்குளம், பெரியமறவன்குளம், வையம்பட்டி கிராமங்கள். இந்த கிராமங்களில் தற்போது 100 நாள் வேலை பணிகள் நடந்து வருகின்றன. மறவன் குளம் கிராமங்களுக்கு சுமார் 600 கார்டுகளும், வையம்பட்டி பகுதிகளுக்கு 250 கார்டுகளும் உள்ளன. மறவன்குளம் கிராம மக்களுக்கு இதுவரை 13 நாட்கள் மட்டும் வேலை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வையம்பட்டி கிராம மக்களுக்கு தொடர்ந்து அப்பகுதியில் வேலை வைத்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
பெரிய கிராமமான மறவன் குளம் கிராமத்திற்கு தொடர்ந்து வேலை வழங்காமல் சிறிய கிராமமான வையம்பட்டிக்கு தொடர்ந்து வேலை வழங்குவதாகவும் தெரிவித்தனர். 100 நாள் வேலை தங்களுக்கும் வழங்க வேண்டும் எனக்கூறி 3 மினி லாரிகளில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பேச்சுவார்த்தை
அப்போது தங்களுக்கு தொடர்ந்து 100 நாள் வேலை ஒரு ஆண்டுக்குள் வழங்க வேண்டும். வேலையும் முறையாக வழங்க வேண்டும் என கூறி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது உங்கள் கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுங்கள், உங்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.