கழுத்தில் கத்தியை வைத்து பெண் தற்கொலை மிரட்டல்... கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

விசாரணையில் அந்த பெண் மாதம்பட்டி குப்பனூர் பகுதியை சேர்ந்த மரகதவல்லி (வயது 45) என்று தெரியவந்தது.

Update: 2024-02-05 20:36 GMT

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் பொதுமக்களின் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர். மனுகொடுக்க வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்திய பின்னரே உள்ளே அனுப்பினர்.

அப்போது அங்கிருந்த ஒரு பெண்ணின் நடவடிக்கையில் போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அந்த பெண்ணின் பையை சோதனை செய்ய போலீசார் முயன்றனர். அப்போது அந்த பெண், திடீரென்று அவரது கழுத்தில் கத்தியை வைத்து தனது மனு மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார்.

இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மகளிர் போலீசார் உள்பட பலரும் கத்தியை தருமாறு கூறியும் அந்த பெண் தரவில்லை. இதனால் உதவி கமிஷனர் கணேசன் மற்றும் போலீசார் அந்த பெண்ணிடம் இருந்து கத்தியை பிடுங்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. கழுத்தில் அறுத்துவிடக்கூடாது என்பதற்காக கையால் கத்தியை பிடித்தபடியே போலீசார் ஜீப்பில் ஏற்றி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையில் பாரூக் என்ற போலீஸ்காரர், அசம்பாவிதத்தை தடுக்க, அந்த பெண்ணிடம் இருந்து கத்தியை பிடுங்க முயன்றபோது அவரது கையில் காயம் ஏற்பட்டது. ஒருவழியாக கத்தியை அந்த பெண்ணிடம் இருந்து போலீசார் கைப்பற்றினர். விசாரணையில் அந்த பெண் மாதம்பட்டி குப்பனூர் பகுதியை சேர்ந்த மரகதவல்லி (வயது 45) என்று தெரியவந்தது.

மேலும், அவர் வைத்திருந்த மனுவில், 2022-ம் ஆண்டில் அவரை திட்டிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன் ? என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த சம்பவத்தால் கோவை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்