மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி பெண் பலி
போடி அருகே மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி பெண் பலியாகினார்;
போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம் அழகர்சாமி தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 63). சமையல் தொழிலாளி. இவர் தனது மனைவி ராமதேவி (50), 8 வயது பேத்தி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் போடிக்கு சென்று கொண்டிருந்தார்.
போடி-தேவாரம் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதையடுத்து மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ராமதேவி மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் கணவர் கண்முன்னே உடல் நசுங்கி ராமதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து போடி நகர் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண வேணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ராமதேவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த ெஜயராமன் மற்றும் அவரது பேத்தியை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போடி அருகே உள்ள திம்மரசநாயக்கன்பட்டியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவரான முருகனை (54) கைது செய்தனர்.