மின்சாரம் தாக்கி பெண் பலி
கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார். மேலும் உடலை எடுக்க விடாமல் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்
கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார். மேலும் உடலை எடுக்க விடாமல் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்சாரம் தாக்கியது
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை சர்க்கார்மூலா முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பன். டிரைவர். இவருடைய மனைவி ஜெயம்மா(வயது 52). தனியார் தேயிலை தோட்ட தொழிலாளி. இவர்களுக்கு தேவராஜ்(37), சிவராஜ்(35) ஆகிய 2 மகன்களும், அஸ்வினி(32) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் வழக்கம்போல் ஜெயம்மா நேற்று காலை 8 மணிக்கு தேயிலை தோட்டத்தில் களை செடிகளை அரிவாள் மூலம் வெட்டும் பணியில் ஈடுபட்டார். அங்கு 1-வது டிவிஷனில் உள்ள ஒரு இரும்பு மின் கம்பத்தின் அருகில் பணியை தொடர்ந்தபோது, அந்த கம்பத்தில் அரிவாள் உரசியதாக தெரிகிறது. ஆனால் மேல் பகுதியில் செல்லும் உயர் மின் அழுத்த கம்பியில் இருந்து கசிந்த மின்சாரம், அந்த கம்பத்தில் நிறைந்திருந்துள்ளது. அந்த சமயத்தில் அரிவாள் கம்பத்தில் உரசியதால் திடீரென ஜெயம்மாவை மின்சாரம் தாக்கியது. அவரது உடல் கருக தொடங்கியது.
மற்றொரு பெண் படுகாயம்
இதை கண்ட சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சக தொழிலாளியான தகரம்பாடியை சேர்ந்த நீலிசித்தி(49) என்பவர் அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் நீலிசித்தி படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கும், மின்வாரியத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தேவர்சோலை போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது ஜெயம்மா ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. பின்னர் படுகாயம் அடைந்த நீலிசித்தியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாலை மறியல்
இதையடுத்து உயிரிழந்த ஜெயம்மாவின் உடலை எடுத்து செல்ல போலீசார் முயன்றனர். ஆனால் அவர்களை தடுத்து நிறுத்திய தொழிலாளர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக மின்வாரியத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்ததும், கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா, தாசில்தார் சித்தராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் கேட்காமல், கூடலூர்-சுல்தான்பத்தேரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் மின்வாரியம் சார்பில் உரிய இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதன்பின்னரே தொழிலாளர்கள் மறியலை கைவிட்டனர்.
உரிய இழப்பீடு
இருப்பினும் எஸ்டேட் நிர்வாகம் தரப்பில் எந்த உறுதியும் அளிக்காததால், உடலை எடுக்க விடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆம்புலன்ஸ் வேனையும் சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே எஸ்டேட் நிர்வாகம் தரப்பில் உரிய இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. மேலும் ரூ.2 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகை விரைவாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து போலீசார் உயிரிழந்த ஜெயம்மாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து தேவர்சோலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.