பண்ருட்டி அருகே தனியார் பஸ் மோதி பெண் சாவு படுகாயமடைந்த மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை

பண்ருட்டி அருகே தனியார் பஸ் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மூதாட்டிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Update: 2022-07-06 16:55 GMT


பண்ருட்டி, 


பண்ருட்டி அருகே உள்ள மேல் கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் கிச்சான். இவரது மனைவி நல்லிமுத்து (வயது 60). அதே பகுதியை சேர்ந்தவர் மலையான் மனைவி அஞ்சம்மாள் (வயது 62).

நேற்று காலை 8.30 மணியளவில் நல்லிமுத்து, அஞ்சம்மாள் ஆகியோர் மேல்பட்டாம்பக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக, மேல்கவரப்பட்டு பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

பெண் சாவு

அப்போது, பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று, சாலையேரம் நின்று கொண்டிருந்த நல்லிமுத்து, அஞ்சம்மாள் ஆகியோர் மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உடன் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நல்லி முத்து பரிதாபமாக உயிரிழந்தார். அஞ்சம்மாளுக்கு தீவிர சிகிச்சையில் உள்ளார்.

சாலை மறியல்

இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த மேல் கவரப்பட்டு கிராம மக்கள், வேகமாக செல்லும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுப்பது, விபத்துக்கு காரணமான டிரைவரை கைது செய்வது மற்றும் அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கூறி கடலூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் கடலூர்-பண்ருட்டி சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்