தகர கொட்டகையில் பாய்ந்த மின்சாரம் தாக்கி பெண் சாவு; காப்பாற்ற முயன்றவரும் பலி

மாடுகளை கட்டுவதற்கு சென்றபோது, தகர கொட்டகையில் பாய்ந்த மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார். அவரை காப்பாற்ற முயன்றவரும் பலியானார்.;

Update: 2022-07-27 18:40 GMT

தொண்டி

மாடுகளை கட்டுவதற்கு சென்றபோது, தகர கொட்டகையில் பாய்ந்த மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார். அவரை காப்பாற்ற முயன்றவரும் பலியானார்.

மின்சாரம் தாக்கியது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தேளூர் ஊராட்சி மல்லனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனிமுத்து. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா(வயது 40).

தான் வளர்த்து வந்த மாடுகளை தகர கொட்டகையில் கட்டுவதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவில், தன் உறவினரான சுகன்யா என்ற பெண்ணுடன் கவிதா சென்றுள்ளார்.

அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. தகர கொட்டகையை கவிதா தொட்டுள்ளார். அப்போது அதில் மின்சாரம் பாய்ந்து இருந்ததால் கவிதா தூக்கி வீசப்பட்டார்.

2 பேர் பலி

இதைக்கண்டதும் சுகன்யா அலறினார். அந்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த கருப்பையா(50) அங்கு ஓடி வந்தார். உயிருக்கு போராடிய கவிதாவை தூக்க முயன்றார்.

அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்த தகவல் அறிந்த தொண்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

கவிதா மற்றும் கருப்பையா உடல்களை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகரகொட்டகையில் மின்சாரம் பாய்ந்தது எப்படி? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.. இந்த சம்பவத்தால் மல்லனூர் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Tags:    

மேலும் செய்திகள்