ஊத்தங்கரை அருகே திருமண கோஷ்டி சென்ற வேன் கவிழ்ந்து பெண் பலி மணமக்கள் உள்பட 19 பேர் படுகாயம்
ஊத்தங்கரை அருகே திருமண கோஷ்டி சென்ற வேன் கவிழ்ந்து பெண் பலியானார். மணமக்கள் உள்பட 19 பேர் படுகாயம் அடைந்தனர்.;
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே திருமண கோஷ்டி சென்ற வேன் கவிழ்ந்து பெண் பலியானார். மணமக்கள் உள்பட 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
வாடகை வேன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட சுண்ணாலம்பட்டியை சேர்ந்தவர் ராமு (வயது 25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உஷா (20) என்ற பெண்ணுக்கும் நேற்று தண்ணீர்பந்தலில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதற்காக ஊத்தங்கரை பனந்தோப்பை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமான வேனை உறவினர்கள் வாடகைக்கு பேசி இருந்தனர். மணமக்கள், உறவினர்கள் தயாராவதற்கு தாமதம் ஆனதால் டிரைவர் வேனை ஷெட்டில் நிறுத்தி விட்டு சென்றதாக தெரிகிறது.
வேன் கவிழ்ந்தது
இந்த நிலையில் மணமக்களின் உறவினர்கள் தயாரானதும் டிரைவர் இல்லாததால் வேன் உரிமையாளருக்கு போன் செய்து தாங்களே வேனை ஓட்டி செல்வதாக கூறினார்களாம். இதையடுத்து வேனை உறவினர் சரவணன் என்பவர் ஓட்டினார். அதில் மணமக்கள் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.
நேற்று காலை 7 மணி அளவில் அந்த வேன் ஒன்னகரை வனப்பகுதி அருகில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்து அலறினர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பெண் பலி
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் ரத்தினவேல் மனைவி சாந்தி (35) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் வேனில் சென்ற மணமக்கள் ராமு, உஷா மற்றும் உறவினர்கள் ரத்தினவேல் என்கிற சுதாகர், பொன்னுவேல், முருகம்மாள், செல்வி, கண்ணையன், ராதா உள்பட 19 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விபத்துக்குள்ளான வேனை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் திருமணம் நிறுத்தப்பட்டது. திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்து பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.