பத்திரப்பதிவு அதிகாரி காரை வழிமறித்து பெண் தர்ணா

பத்திரப்பதிவு அதிகாரி காரை வழிமறித்து பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது;

Update: 2022-09-27 22:27 GMT

களக்காடு:

களக்காடு நகரத்தெருவை சேர்ந்தவர் மேகலா (வயது 61). இவரது கணவர் சுதாகர். கடந்த 2009-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்தார். இதுபோல அவரது மகனும் கடந்த 2017-ம் ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனைதொடர்ந்து மேகலா தனியாக வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான நிலங்கள் சிதம்பரபுரத்தில் உள்ளதாகவும், இந்த நிலங்களை சிலர் மோசடியாக பத்திரப்பதிவு செய்து, அவரிடமிருந்து அபகரிக்க முயற்சி செய்து வருவதாகவும் மேகலா புகார் தெரிவித்தார். அதிகாரிகளுக்கும் மனுக்கள் கொடுத்துள்ளார். இந்நிலையில் நெல்லை பத்திரபதிவுத் துறை டி.ஐ.ஜி. கவிதாராணி களக்காடு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று ஆய்வுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த மேகலா தனது மனுவின் நிலை குறித்து கேட்டார். அதனைதொடர்ந்து சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனிடையே டி.ஐ.ஜி. கவிதாராணி அங்கிருந்து தனது காரில் ஏறி புறப்பட்டார். இதைப்பார்த்த மேகலா ஒடிச்சென்று காரை வழிமறித்து, காரின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் சென்று மேகலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி காரை விடுவித்தனர். இதையடுத்து டி.ஐ.ஜி. கவிதா ராணி காரில் ஏறி சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்