பெண்ணிடம் 7 பவுன் நகை மோசடி

மறுமணம் செய்வதாக கூறி 2 குழந்தைகளின் தாயிடம் 7 பவுன் நகையை மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update: 2023-09-30 18:45 GMT

கன்னியாகுமரி:

மறுமணம் செய்வதாக கூறி 2 குழந்தைகளின் தாயிடம் 7 பவுன் நகையை மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மறுமணம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. பெண்ணின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு 2-வது திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இது தொடர்பாக ஆன்லைனில் திருமண தகவல் மையம் ஒன்றில் மறுமணத்திற்காக அந்த பெண் பதிவு செய்திருந்தார்.

அந்த பதிவை பார்த்த ஆண் ஒருவர், அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்திருப்பதாகவும், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தான் ஒரு விதவை பெண்ணை மறுமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

பெண்ணிடம் நகை அபேஸ்

இதனை தொடர்ந்து இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். பின்னர் அந்த தனியார் நிறுவன ஊழியர், 2 குழந்தைகளின் தாயை தொடர்பு கொண்டு கன்னியாகுமரியில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அவர், தனியார் நிறுவன ஊழியருடன் கன்னியாகுமரிக்கு வந்துள்ளார்.

பின்னர் அவர் திருமண தோஷம் போக்க நீங்கள் அணிந்திருக்கும் நகையை கன்னியாகுமரி கடலில் நனைக்க வேண்டும். எனவே அந்த நகையை கழற்றி கொடு என கேட்டுள்ளார். அவரது பேச்சை நம்பி அந்த பெண்ணும் 7 பவுன் நகையை கழற்றி கொடுத்துள்ளார். நகையை பெற்று கொண்ட தனியார் நிறுவன ஊழியர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

தனியார் நிறுவன ஊழியர் கைது

நீண்ட நேரம் ஆகியும் நகையை வாங்கி சென்றவர் வரவில்லை என்பதை அறிந்த பெண், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை மோசடி செய்தவரை தேடி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், பெண்ணிடம் நகை மோசடி செய்த நபர் கோவை மாவட்டம் சாய்பாபா காலனியை சேர்ந்த யுவராஜ் (வயது 49) என்பதும், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் கன்னியாகுமரி போலீசார் அவரது வீட்டில் அதிரடியாக சென்று யுவராஜை கைது செய்தனர்.

பின்னர் கன்னியாகுமரிக்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட யுவராஜிக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்