சேலத்தில் 16 வயது மகள் திடீரென மாயமானதால் அதிர்ச்சி: சாப்பாட்டில் விஷம் கலந்து கணவருக்கு கொடுத்து விட்டு பெண் தற்கொலை

சேலத்தில் 16 வயது மகள் மாயமானதால் கணவருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து விட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-09-22 21:15 GMT

சேலம், 

லாரி டிரைவர்

சேலம் பொன்னம்மாபேட்டை மல்லி செட்டி தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 47), லாரி டிரைவர். இவருடைய மனைவி சுஜாதா (40). இவர்களுக்கு ஒரு மகன், பிளஸ்-1 படிக்கும் 16 வயதுடைய மகள் உள்ளனர்.

மகள் சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருந்து உள்ளார். இதை பெற்றோர் கண்டித்தனர். இருப்பினும் அவர் செல்போனில் பேசுவதை நிறுத்தவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினமும் மகள் யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த தாய் சுஜாதா கண்டித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் மாணவி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடிய போது மகளை காணவில்லை.

தற்கொலை

இது குறித்து பெற்றோர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் மகள் காணாமல் போனதால் சுஜாதா மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதையடுத்து வீட்டில் வைத்திருந்த விஷ மருந்தை குடித்த சுஜாதா, மீதி விஷத்தை சாப்பாட்டில் கலந்து கணவர் செந்திலுக்கு கொடுத்தார். அதை அவர் சாப்பிட்டார். சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினர்.

இதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அங்கு வந்து மயங்கி கிடந்த கணவன்-மனைவியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிசிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சுஜாதா பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடும் செந்திலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சுஜாதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து சுஜாதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, மாயமான மாணவி வாலிபர் ஒருவருடன் அடிக்கடி செல்போனில் பேசி உள்ளார். இது குறித்து பெற்றோர் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சம்பந்தப்பட்ட வாலிபரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இனி மாணவியுடன் பேசக்கூடாது என்று அறிவுரை வழங்கி உள்ளனர்.

சோகம்

இருப்பினும் தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்துள்ளனர். இந்த நிலையில் மகள் திடீரென மாயமாகி உள்ளார். எனவே அவள் அந்த வாலிபருடன் ஓடி இருக்கலாம் என நினைத்து மனம் உடைந்த சுஜாதா கணவருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து விட்டு அவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து உள்ளார் என்று கூறினர்.

மகள் மாயமானதால் கணவருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலம் அம்மாபேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்