போலீஸ் நிலையம் முன் விஷம் குடித்து பெண் தற்கொலை

சொத்து, நகை கேட்டு பெற்ற மகளே புகார் கொடுத்ததால் மனமுடைந்த தாயார் போலீஸ் நிலையம் முன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-07-26 00:06 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் செட்டிச்சார்விளை கொல்லிக்கோட்டுவிளையை சேர்ந்தவர் சிம்சன். இவருடைய மனைவி லீமாராணி (வயது 42). இவர்களுக்கு ஷாம்லன் (25) என்ற மகனும், ஷாம்லி (23) என்ற மகளும் உள்ளனர்.

கடந்த ஆண்டு மகள் ஷாம்லிக்கும், அதே பகுதியை சேர்ந்த பிராங்கோ என்பவருக்கும் திருமணம் நடந்தது. பிராங்கோ வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் திருமணமான சில நாட்களில் கணவன், மனைவி இருவரும் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டனர்.

இந்தநிலையில் திருமணத்தின்போது லீமாராணி தனது வீட்டை தான் இறந்த பிறகு மகளுக்கு கொடுப்பதாக உயில் எழுதி கொடுப்பதாக கூறியுள்ளார். அத்துடன் திருமணத்தின்போது ஷாம்லிக்கு கூறியபடி நகை போடவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஷாம்லி தனது தாயார் மீது கோபமாக இருந்துள்ளார்.

போலீசில் புகார்

இந்தநிலையில் கடந்த வாரம் ஷாம்லி வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். ஆனால் அவர் தனது தாயார் வீட்டுக்கு செல்லவில்லை. அத்துடன் தனது தாய், தந்தையிடம் பேசவும் இல்லை. இதையடுத்து கடந்த 23-ந் தேதி இரவு லீமாராணி தனது மகன் ஷாம்லனை அழைத்துக்கொண்டு மகள் ஷாம்லி வீட்டுக்கு சென்றார். ஆனால் தாய், சகோதரனை பார்க்க மறுத்த ஷாம்லி அவசர போலீஸ் எண் 100-க்கு போன் செய்து தன்னுடைய தாயாரும், சகோதரனும் தன்னை துன்புறுத்துவதாக புகார் செய்தார்.

உடனே திருவட்டார் போலீசார் ஷாம்லி வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரித்தனர். குடும்ப பிரச்சினை என்பதால் காலையில் போலீஸ் நிலையத்துக்கு வருமாறு தாய்-மகளிடம் கூறிச் சென்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை ஷாம்லி தனது மாமியாருடன் திருவட்டார் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது தாயார் லீமாராணி மற்றும் சகோதரன் ஷாம்லன் ஆகியோர் தனக்கு தருவதாக கூறிய நகை மற்றும் சொத்தை தரவில்லை என கூறியிருந்தார்.

விஷம் குடித்தார்

மகள் சொத்துக்காகவும், நகைக்காகவும் போலீசில் புகார் செய்ததை அறிந்த லீமாராணி மிகவும் மனமுடைந்தார். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக லீமாராணி நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் திருவட்டார் போலீஸ் நிலையத்து புறப்பட்டார்.

போலீஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் சென்றவுடன் லீமாராணி தான் எடுத்து வந்த விஷத்தை குடித்தார். இதில் அவர் மயங்கி விழுந்த சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்