நஷ்டஈடு பணத்தில் மாமியார் வீட்டுமனை வாங்கியதால் பெண் தற்கொலை

கண்டாச்சிபுரம் அருகே விபத்தில் கணவர், மகள் பலியானதால் வந்த நஷ்டஈடு பணத்தில் மாமியார் நிலம் வாங்கியதால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-07-02 15:19 GMT

திருக்கோவிலூர்:

கண்டாச்சிபுரம் அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவபாலன் கண்ணன். இவரும், நர்மதாவும்(வயது 29) 10 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஜனனி(8) என்ற மகள் இருந்தாள். பிரனவ்குமார்(5) என்ற மகன் இருக்கிறான். இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் சிவபாலன் கண்ணனும், ஜனனியும் பலியானார்கள். இதையடுத்து நர்மதா, தனது மகன் பிரனவ்குமார், மாமியார் தமிழ்செல்வி ஆகியோர் விழுப்புரத்தில் உள்ள நாத்தனாரான சதீஷ்குமார் மனைவி சிவசக்தி என்கிற ராஜராஜேஸ்வரி என்பவரது வீட்டில் வசித்து வந்தனர்.

வீட்டுமனை வாங்கிய மாமியார்

இந்த நிலையில் சிவபாலன் கண்ணன் பலியானதற்காக நஷ்டஈடாக பணம் வந்தது. அந்த பணத்தை கொண்டு தமிழ்செல்வி வீட்டுமனை வாங்கியதாக கூறப்படுகிறது. இதை நர்மதா தட்டிக்கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நர்மதா, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று தனது தந்தை படத்திற்கு மாலை அணிவித்து, கதவை பூட்டி உள்பக்கமாக தாழ்ப்பாழ் போட்டுக்கொண்டார். பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

வீட்டின் கதவு வெகுநேரமாக திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு நர்மதா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கண்டாச்சிபுரம் போலீசார் விரைந்து சென்று நர்மதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்