ஓடும் பஸ்சில் நகை திருடிய பெண் கைது

ஆரல்வாய்மொழியில் ஓடும் பஸ்சில் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-06-10 20:42 GMT

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழியில் ஓடும் பஸ்சில் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பையில் இருந்த நகைகள்

தூத்துக்குடி மாவட்டம் மங்களபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி இசக்கியம்மாள் (வயது46). இவர் தனது மகள் மற்றும் மருமகனுடன் நாகர்கோவிலில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்தார். பின்னர் அவர்கள் நேற்று மாலையில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து வள்ளியூருக்கு அரசு பஸ்சில் புறப்பட்டனர். தாங்கள் ெகாண்டு வந்த பைகளை பஸ்சில் இருக்கையின் கீழ் வைத்திருந்தனர். அவற்றில் ஒரு பையில் நகைகள் இருந்தன.

பஸ் ஆரல்வாய்மொழி அருேக வந்த போது நகைகள் இருந்த பையை காணவில்லை. அந்த பையை தேடிய போது அது முன் இருக்கையில் இருந்த பெண்ணின் அருகே இருந்தது.

நகைகள் மாயம்

இசக்கியம்மாள் அந்த பையை எடுத்த போது அது திறக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் பையில் வைத்திருந்த பொருட்களை சரிபார்த்தார். அப்போது அதில் வைத்திருந்த 2 மோதிரம் மற்றும் கம்மல் என 2 பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து அந்த பெண்ணிடம் கேட்ட போது சரிவர பதில் சொல்லவில்லை. இந்த சம்பவத்தால் பஸ்சில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டிரைவரும், கண்டக்டரும் பஸ்சை ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தினர். தொடர்ந்து அந்த பெண்ணை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கைது

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் வள்ளியூர் பெருமாள் கோவில்தெருவை சேர்ந்த முத்துலெட்சுமி (வயது 48) என்பதும், நகைகளை திருடியது அவர்தான் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து நகைகளை போலீசார் மீட்டனர். அத்துடன் முத்துலெட்சுமியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்