மூதாட்டிகளிடம் நகை திருடிய பெண் கைது

பரமத்திவேலூர் பகுதியில் மூதாட்டிகளிடம் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-22 19:19 GMT

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா, நெட்டையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் எட்டம்மாள் (வயது 63). இவர் கடந்த செப்டம்பர் மாதம் 6-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் இவரிடம் தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீரை வாங்கி குடித்து விட்டு எட்டம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் எட்டம்மாள் புகார் செய்தார். இதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதேபோல் பரமத்தி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ராசாபாளையம் சுங்கச்சாவடி அருகே உள்ள புலவர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாப்பாயி (65). கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி இவர் வீட்டில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பாப்பாயிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். பின்னர் வீட்டில் மாந்திரீகம் செய்யப்பட்டுள்ளதாகவும், பூஜை நடத்தினால் சரியாகி விடும் என்று கூறி மூதாட்டியை ஏமாற்றி 2 பவுன் நகையை எடுத்து கொண்டு மாயமாகி விட்டார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத பெண்ணை தேடி வந்தனர்.

இந்த 2 வழக்குகள் சம்பந்தமாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சேலம், பெரியகொல்லப்பட்டியைச் சேர்ந்த சரவணன் மனைவி மைதிலி (43) என்பவரை சிறையில் இருந்து விசாரணைக்காக வேலூர் போலீசார் அழைத்துவந்தனர். போலீஸ் விசாரணையில் எட்டம்மாள், பாப்பாயி ஆகிய 2 பேரிடம் இருந்து 4 பவுன் நகைகளை திருடிச் சென்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து மைதிலி மீது‌ வழக்குப்பதிவு செய்து மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்