டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சாட்சிகள் ஆஜராக வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை வழக்கில் டாக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சாட்சிகள் ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.;

Update: 2022-08-18 20:44 GMT

தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர். இவர் தனது 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பேரில் தேனி மாவட்ட அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி மாவட்ட கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்தும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரியும் அவர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. அவரது 2 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுதொடர்பான மருத்துவ ஆய்வு நடத்திய அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், தனியார் மருத்துவமனை பெண் டாக்டர், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, தடயவியல் நிபுணர் உள்ளிட்ட சாட்சிகள் வருகிற 22-ந்தேதி இந்த கோர்ட்டில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப வேண்டும்.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், அறிக்கைகளை தேனி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி டீன் இந்த கோர்ட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

========

Tags:    

மேலும் செய்திகள்