பொறியியல் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

இந்தாண்டும், வரும் ஆண்டும், இனி வரக்கூடிய நாட்களிலும் தேர்வு கட்டணம் அதிகரிக்காது என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Update: 2024-08-25 13:37 GMT

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை கிண்டியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

அடுத்த சிண்டிகேட்டில் தீர்மானம் நிறைவேற்றும் வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட பொறியியல் தேர்வுக் கட்டணம் நிறுத்திவைக்கப்படுகிறது. தேர்வுக் கட்டணத்தில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும். இந்தாண்டு மட்டுமல்ல அடுத்தாண்டும் தேர்வுக் கட்டணம் நிறுத்திவைக்கப்படுகிறது. தேர்வு கட்டணத்தை உயர்த்துவது மாணவர்களை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தேர்வுக் கட்டணம், பட்டச் சான்றிதழ் கட்டணம், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், ஆய்வறிக்கைக் கட்டணம் ஆகியவற்றை 50% உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருந்தது. இந்தக் கட்டண உயர்வுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்