2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவது வரவேற்கத்தக்கது; ஜி.கே.வாசன்
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவது வரவேற்கத்தக்கது என்று ஜி.கே.வாசன் கூறினார்.;
சோமரசம்பேட்டை:
திருச்சி வயலூர் பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேட்டூர் அணையை முன்கூட்டியே திறந்தால் மட்டுமே கடைமடை வரை தண்ணீர் செல்ல வாய்ப்பு இருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் நீரின் அளவை அதிகரித்து திறக்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கி, விரைந்து பணியை அரசு முடிக்க வேண்டும். காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் குவாரிகள் அதிக அளவில் அமைக்கப்படுவதை அரசு நிறுத்த வேண்டும்.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பருத்தி, எள் பயிரிடப்பட்டிருந்த பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உரிய இழப்பீடு தர வேண்டும். விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சையில் கள்ளச்சாராயத்தால் 20-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். போதை பொருட்கள், கள்ளச்சாராயம் போன்றவை கொள்ளை, கொலை, வழிப்பறிக்கு அடித்தளமாக உள்ளது. இதனை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும். கள்ளச்சாராயம் விவகாரத்தில் அரசியல் கூடாது.தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக்கை படிப்படியாக குறைப்போம் என்றார்கள். ஆனால் மதுக்கடைகளை புதிய, புதிய வடிவங்களில் திறக்கக்கூடிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. மின்சாரத்தை மாதம் ஒரு முறை கணக்கிடுவதை, தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.கொரோனா சமயத்தில் வளர்ந்த நாடுகள் கூட பாதிக்கப்பட்டபோது, இந்தியா அதிகம் பாதிக்கப்படாமல் படிப்படியாக பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ.க. ஆட்சிதான் காரணம். எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. ஆட்சிதான் தொடரும்.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவது நேர்மையானவர்களுக்கு நல்ல செய்தி. வரி ஏய்ப்பு, லஞ்சம், ஊழல், கடத்தல்காரர்களுக்கு பாதகமான செய்தி. தவறானவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுகிற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தவறான பாதையில் செல்வோர் திருந்துவதற்கு இது ஒரு வாய்ப்பு. இவ்வாறு அவர் கூறினார்.