மின் நுகர்வோர் விதிமுறை திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும்: மத்திய அரசுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

மின் நுகர்வோர் விதிமுறை திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும்: மத்திய அரசுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.;

Update: 2023-06-26 21:45 GMT

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதி ஆட்சிக்கு வந்த பிறகு காற்றில் பறக்கவிடப்பட்டு, வீடு, வணிகம், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டது. இதுமட்டுமல்லாமல், சமீபத்தில் வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

இந்தநிலையில், நேரத்துக்கு ஏற்ற கட்டணம் மற்றும் ஸ்மார்ட் மீட்டர் ஆகியவை குறித்து மின்சார நுகர்வோர் விதி முறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இது மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான மறைமுக வழி. இதனால் நுகர்வோர்களுக்கான மின் கட்டணம் உயருமே தவிர குறையாது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மத்திய அரசின் விதியால் தமிழகத்தில் வீட்டு நுகர்வோர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது. ஒருவேளை, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரை வாய் திறக்காமல் இருந்துவிட்டு, தேர்தலுக்கு பிறகு ஏற்கனவே ஏமாற்றியதுபோல் மறுபடியும் மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் தி.மு.க. இருக்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு, மின்சார நுகர்வோர் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெறவேண்டும். இதற்கு தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு, தமிழக அரசு கொடுத்து திருத்தங்களை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்