அறச்சலூர் அருகே கவுன்சிலர்களுடன் பொதுமக்கள் திடீர் உண்ணாவிரதம்
அறச்சலூர் அருகே கவுன்சிலர்களுடன் பொதுமக்கள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.;
அறச்சலூர்
அறச்சலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு 1-வது வார்டு கவுன்சிலர் துளசிமணி, 11-வது வார்டு கவுன்சிலர் தர்மராஜ் உள்பட பொதுமக்கள் திரண்டனர். பின்னர் பேரூராட்சி அலுவலகம் முன்பு திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி தாசில்தார் சண்முகசுந்தரம் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் கூறும்போது, 'அறச்சலூர் வீரப்பம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பொது இடத்தில் மரம் வெட்டியதை தட்டிக்கேட்ட எங்களை பேரூராட்சி தலைவர் தகாத வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அறச்சலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனே இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
அதற்கு தாசில்தார் கூறும்போது, 'இதுசம்பந்தமாக விசாரித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்' என்றார். அதை ஏற்றுக்கொண்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.