கன்னியாகுமரியில் முதல் முறையாக நடந்தது: சுற்றுலா பயணிகளை கவர்ந்த காற்றாடி திருவிழா;அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரியில் முதல் முறையாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காற்றாடி திருவிழா தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-04 18:45 GMT

கன்னியாகுமரி, 

கன்னியாகுமரியில் முதல் முறையாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காற்றாடி திருவிழா தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

காற்றாடி திருவிழா

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் முதல் முறையாக காற்றாடி திருவிழா தொடங்கியது. அதன்படி சூரிய அஸ்தமன காட்சி முனைய பகுதியில் காற்றாடிகள் பறக்க விடும் தொடக்க நிகழ்ச்சி நேற்று பிற்பகலில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி (முழு கூடுதல் பொறுப்பு) சதீஷ்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாவட்ட வன அதிகாரி இளையராஜா, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் வாழ்த்தி பேசினார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சிறப்புரையாற்றினார். காற்றாடி திருவிழாவை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

பல வண்ண காற்றாடிகள்

அப்போது அவர் வாழ்க தமிழ் என்ற வாசகத்துடனும், நம் நாட்டின் தேசியக்கொடியின் மூவர்ண நிறத்திலான பலூனுடனும் கூடிய பட்டத்தையும் அவர் பறக்க விட்டார். அதைத் தொடர்ந்து பிற மாநிலங்களில் இருந்து 3 குழுவினரும், மலேசியா நாட்டைச் சேர்ந்த ஒரு குழுவினரும், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 2 குழுவினரும் என மொத்தம் 6 குழுவினர் காற்றாடி திருவிழாவில் கலந்து கொண்டு காற்றாடிகளை பறக்க விட்டனர்.

அதில் வி லவ் தமிழ்நாடு என்ற வாசகத்துடன் கூடிய காற்றாடி, இந்திய தேசியக்கொடியின் மூவர்ண நிறத்திலான காற்றாடிகள், புலி உருவங்களுடன் கூடிய காற்றாடி, கார்ட்டூன் தொடர்களில் வரும் ஸ்பான்ஜ் பாப் உருவ காற்றாடி, தாய்லாந்து நாட்டின் பிரபலமான கார்ட்டூன் பொம்மை உருவ காற்றாடி, ரிங் காற்றாடி, அசோக சக்கர வடிவிலான காற்றாடி என ஏராளமான வடிவங்களில், பல விதமான வண்ணங்களில் பறக்க விடப்பட்டன. இதனை சுற்றுலா பயணிகளும், மாணவ- மாணவிகளும் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தோடு பார்த்து ரசித்தனர். கடற்கரையில் காற்று அதிகமாக இருந்ததால் காற்றாடிகள் அங்குமிங்கும் வேகமாக பறந்தன. இதனால் காற்றாடி பறக்க விட்ட குழுவினர் காற்றாடிகளை கையாள திக்குமுக்காடினர். இந்த திருவிழா சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தது என்றே கூறலாம்.

இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் தாமரைபாரதி, கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் நன்றி கூறினார்.

அற்புதமான நிகழ்ச்சி

முன்னதாக அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுற்றுலா பயணிகளை ஒவ்வொரு சுற்றுலாத்தலத்துக்கும் கொண்டு வருவதற்காக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட காற்றாடி திருவிழா 3 நாட்கள் கன்னியாகுமரி மற்றும் சங்குத்துறை கடற்கரைகளில் நடைபெற இருக்கிறது. இதனை கன்னியாகுமரியில் தொடங்கி வைத்திருக்கிறோம். உண்மையிலேயே மிகவும் அற்புதமான நிகழ்ச்சியாக இருக்கிறது. இது மேலும், மேலும் நமது பகுதிக்கு மெருகூட்டும் வகையில் அமையும்.

கன்னியாகுமரிக்கு பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதனால் காற்றாடி திருவிழாவுக்கும் பல நாடுகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் காற்றாடி பறக்க விடுவதற்காக வந்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த காற்றாடி திருவிழா இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணிவரை சங்குத்துறை கடற்கரையில் நடைபெற உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்