தச்சம்பட்டு பெரிய ஏரிக்கு வரும் கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் கொண்டுவரப்படுமா?

தச்சம்பட்டு பெரிய ஏரிக்கு நீர்வரத்து கால்வாயை தூர்வாரி தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.;

Update: 2022-10-12 16:52 GMT

தச்சம்பட்டு பெரிய ஏரிக்கு நீர்வரத்து கால்வாயை தூர்வாரி தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தச்சம்பட்டு பெரிய ஏரி

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தச்சம்பட்டு. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் இரண்டு ஏரிகள் உள்ளன. வடக்கு ஏரி ஒன்றும், பெரிய ஏரி ஒன்றும் உள்ளது. பெரிய ஏரி வெறையூர் செல்லும் சாலையில் உள்ளது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் வந்து நிரம்பிய நிலையில் இந்த பெரிய ஏரிக்கு மழை காலங்களில் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் இந்த ஏரி நிரம்புவதில்லை. காரணம் கால்வாய்கள் இல்லாமல் ஏரி எப்படி நிறையும் என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

80 ஏக்கர் பரப்பளவு கொண்டது பெரிய ஏரி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிமராமத்து பணி மூலம் கரைகளும், மதகுகளும் சீரமைக்கப்பட்டன. இருப்பினும் ஏரியில் தண்ணீர் இல்லை. பெரும்பாலும் மழை காலங்கள் மட்டுமல்லாமல் எந்த நாட்களிலும் இந்த ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டுவது கிடையாது. மாறாக வறண்ட ஏரியாகவே காணப்படுகிறது. ஏரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீர் வரும்.

விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஆனால் இந்த ஏரிக்கு பல பகுதிகளில் கால்வாய் இருந்தும் தண்ணீர் வருவது கிடையாது. ஏரிக்கு வரும் கால்வாயை தூர்வாரி தண்ணீர் கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார்களை தெரிவித்தும் அதற்கு அவர்கள் இந்த ஏரி எங்களது கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறுகின்றனர்.

இந்த ஏரியை நம்பி 1000-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளுக்கு மட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கும் ஏரி மூலம் தண்ணீர் செல்கிறது. ஆனால் இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டுவதற்கு எந்த ஒரு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஏரிக்கு வரும் கால்வாய்களை முழுவதும் தூர்வாருவது மட்டுமல்லாமல் நிரந்தரமாக இந்த ஏரிக்கு தண்ணீர் வருவதை உறுதி செய்யவார்களா என்று அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்