கடலூரில் மூடிக்கிடக்கும் மீன் அருங்காட்சியகம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா?பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு

கடலூரில் மூடிக் கிடக்கும் மீன் அருங்காட்சியகத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-02-25 18:45 GMT

கடலூர் மாநகரத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால், மக்கள் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சை நாடி செல்கின்றனர். அங்கு மாலை நேரங்களில் சென்று சிறிது நேரம் கடல் அலையை ரசித்தும், சீறி வரும் அலைகளை ரசித்தபடி வருகின்றனர். சிலர் கடற்கரையோரம் சிறிது தூரம் நடந்து பொழுதை கழித்து வருகின்றனர்.

இது தவிர பாரதிசாலையில் உள்ள மாநகராட்சி சிறுவர் விளையாட்டு பூங்காவுக்கும் வந்து செல்கின்றனர். இந்த இரண்டும் தான், மாநகர மக்களின் பொழுது போக்காக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பூங்கா அருகிலேயே மீன் அருங்காட்சியகத்தை தொடங்க அப்போதைய மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ முயற்சி எடுத்தார்.

அரிய வகை மீன்கள்

அதன்படி அண்ணாமலை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் அப்போதைய நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து ரூ.27 லட்சத்து 70 ஆயிரம் செலவில் மீன் அருங்காட்சியகத்தை கட்டி முடித்தது.

இந்த மீன் அருங்காட்சியகத்தை 22.11.2008 அன்று உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மீன் அருங்காட்சியகத்தில் 8 பெரிய தொட்டிகள், 6 சிறிய தொட்டிகள் அமைத்து, அதில் அரிய வகை மீன்கள், நண்டுகள், இறால்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் வளர்க்கப்பட்டன. குறிப்பாக விலை உயர்ந்த லைன் மீன்களும் இருந்தன. இதை பராமரிக்கவும் ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.

மீன்கள் செத்தன

பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் இந்த மீன் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்து, இங்குள்ள மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை பார்வையிட்டு சென்றனர். இதற்காக பூங்காவுக்கு வருபவர்களுக்கு நுழைவு கட்டணமான ரூ.5 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால் மாநகர மக்கள் அதிக அளவில் வர தொடங்கினர். இந்த மீன் அருங்காட்சியகம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய படிப்புக்கும் உதவியாக இருந்தது.

ஆனால் இந்த அருங்காட்சியகம் 8 மாதங்கள் மட்டுமே சிறப்பாக செயல்பட்டது. அதன்பிறகு ஏற்பட்ட புயலால் கடலூரில் மின் தடை ஏற்பட்டது. இதனால் அருங்காட்சியகத்தில் உள்ள ஏரேட்டர் இயங்கவில்லை. இதன் காரணமாக போதிய ஆக்சிஜன் கிடைக்காததால் விலை உயர்ந்த மீன்கள் உள்ளிட்ட அனைத்து கடல்வாழ் உயிரினங்களும் ஒவ்வொன்றாக செத்து மடிந்தன. மின்சாரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்யாததால் மீன்கள் அனைத்தும் இறந்து விட்டது.

செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

அதன்பிறகு இந்த மீன் அருங்காட்சியகத்தை பராமரிக்காமல் அப்போதைய நகராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டு விட்டது. பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் இதை அமைத்தாலும், அதை நகராட்சி நிர்வாகம் தான் பராமரிக்க வேண்டும் என்று அப்போது ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் படி நகராட்சி நிர்வாகம் செயல்படாததால் இந்த மீன் அருங்காட்சியகம் பராமரிப்பின்றி மூடப்பட்டது.

தற்போது மீன் அருங்காட்சியகம் இருந்த இடத்தை குறிக்கும் வகையில் கட்டிடம் மட்டும் உள்ளது. அந்த கட்டிடமும் சேதமடைந்து காணப்படுகிறது. அந்த கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகள் உடைந்து, வீணாகி வருகிறது. ஆகவே தற்போது உள்ள மாநகராட்சி நிர்வாகம் மாநகர மையப்பகுதியில் இருக்கும் இந்த மீன் அருங்காட்சியகத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பராமரிக்க வேண்டும்

இது பற்றி மாநகரத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

கடலூர் வில்வநகர் அறிவுக்கரசு:-

கடலூர் மாநகரத்தின் மையப் பகுதியில் மீன் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாமல் அவை குறைந்த நாட்களே செயல்பட்டு வந்தது. இதுவரை அந்த மீன் அருங்காட்சியகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த மீன் அருங்காட்சியகத்தை பராமரித்து வித, விதமாக மீன்களை வளர்த்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொதுமக்களும் மாநகராட்சி பூங்காவிற்கு விடுமுறை நாட்களில் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். அவர்களுக்கும் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும். ஆகவே மாநகராட்சி நிர்வாகம் இதை பராமரித்து செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீன்வளம்

கடலூர் சாவடியை சேர்ந்த கமல்ராஜ்:- கடலூர் மாநகராட்சி பூங்கா அருகில் கடந்த 2008-ம் ஆண்டு மீன் அருங்காட்சியகம் செயல்பட்டு வந்தது. அதில் வித, விதமான மீன்கள் வளர்க்கப்பட்டன. ஆனால் அவை பராமரிப்பின்றி மூடப்பட்டு விட்டது. கடலூர் மீன்பிடி தொழில் சார்ந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. ஆகவே மாவட்ட தலைநகரமாக உள்ள கடலூரில் மீன் அருங்காட்சியகம் அமைக்க வேண்டியது அவசியம். இது தேவையான ஒன்று. மீனவர்கள் பிடிக்கும் மீன்கள் பற்றி அறிந்து கொள்ளவும், மீன்களின் பல்வேறு மருத்துவ குணங்கள், அதன் வகைகள் குறித்து அறிந்து கொள்வதற்காகவும் அதிகமான மீன்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகளையும் செய்து தர வேண்டும். பூங்காவுக்கு அதிகம் பேர் வருகிறார்கள். அவர்கள் மாவட்டத்தில் உள்ள மீன் வளம் குறித்து அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்