சாலை சீரமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா?

அதிராம்பட்டினத்தில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை சீரமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-09-03 20:20 GMT

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினத்தில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை சீரமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

அதிராம்பட்டினம் சேர்மன் வாடியில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் உள்பட பலர் தினமும் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் இந்தசாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பாதியில் நிறுத்தப்பட்ட சீரமைக்கும் பணி

இதை தொடர்ந்து சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது. இதில் முதல் கட்டமாக, பழைய தார் பூச்சு பெயர்த்து எடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டன. ஆனால் அதன் பிறகு எந்த பணியும் நடைபெறவில்லை.

பணி நிறுத்தப்பட்டு பல நாட்களாகியும் மீண்டும் தொடங்கப்படவில்லை. சாலையில் ஜல்லி கற்கள் சிதறி கிடப்பதால் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

மீண்டும் தொடங்க வேண்டும்

மேலும் நடந்து செல்பவர்கள் கால்களையும் ஜல்லி கற்கள் பதம் பார்க்கின்றன. கார் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் போது புழுதி பறப்பதால், அந்த பகுதி புகை மண்டலம் போல் காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் காய்கறி மார்க்கெட், பள்ளிகள், வங்கிகள் அதிகம் உள்ளதால் இப்பகுதி எந்த நேரமும் போக்குவரத்து நிறைந்து காணப்படும்.

நகரின் மிக முக்கிய சாலை என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்ட சாலை சீரமைக்கும் பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்