மாமல்லபுரம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் ரெயில் பாதை திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வழியாக சென்னை-கடலூர் ரெயில் பாதை திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து நடைமுறைபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.;

Update:2022-11-21 13:15 IST

உலகபுகழ் பெற்ற சுற்றுலா தலம்

சென்னைக்கும்-புதுச்சேரிக்கும் மத்தியில் அமைந்துள்ள மாமல்லபுரம் நகரம், உலகபுகழ்பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, கணேசரதம் உள்ளிட்ட புராதன சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னங்களாக திகழ்கிறது. 7-ம் நூற்றாண்டில் மாமல்லபுரத்தை துறைமுகப்பட்டினமாகவும், காஞ்சீபுரத்தை தலைநகராகவும் கொண்டு ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் இங்குள்ள கற்கோவில்களையும், குடைவரை மண்டபங்களையும், கடற்கரை கோவில் உள்ளிட்ட ரதகோவில்களையும் பாறைகளில் கலை நயத்துடன் வடிவமைத்து, செதுக்கி உள்ளனர். இதனை கண்டுகளிக்க நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் கார், வேன் போன்ற வாகனங்களிலும், அரசு பஸ்களிலும், மாமல்லபுரம் வந்து செல்கின்றனர்.

கடலோர ரெயில் பாதை திட்டம்

இப்படி வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கடந்த 2008-2009 ம் ஆண்டில் மத்திய ரெயில்வே துறை மாமல்லபுரத்தை மைய பகுதியாக வைத்து சென்னை-கடலூருக்கு, கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வழியாக 179 கிலோ மீட்டர் தூரத்திற்கு, ரூ.523 கோடி மதிப்பில் கடலோர ரெயில் பாதை திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தை செயல்படுத்த நிலம் கையப்படுத்துதல், அளவீடு செய்தல், மண் பரிசோதனை செய்தல் உள்ளிட்ட ஆய்வு பணிகளுக்காக தனியாக 2010-ம் ஆண்டில் ரூ.6.66 கோடி நிதியை மத்திய அரசு தனியாக ஒதுக்கியது.

இத்திட்டதை சென்னை வேளச்சேரியில் தொடங்கி, பெருங்குடி வழியாக கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜீவ்காந்தி சாலை (பழைய மாமல்லபுரம் சாலை) வழியாக மாமல்லபுரம், கல்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி வழியாக கடலூர் வரை செயல்படுத்த வரைபடம் தயார் செய்யப்பட்டது.

கிடப்பில் போடப்பட்டது

அதேபோல் இந்த கிழக்கு கடற்கரை சாலை ரெயில்வே திட்டத்துடன் வட மாநிலங்கள், தமிழகத்தில் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் செங்கல்பட்டு-மாமல்லபுரம் ரெயில் பாதை திட்டத்தையும் ஒரே நேரத்தில் இணைத்து செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து அதற்காக 2010-ம் ஆண்டில் வரைபடம் தயார் செய்யப்பட்டது. இதற்காக தென்னக ரெயில்வே துறை அதிகாரிகள், வருவாய்துறையினருடன் இணைந்து அப்போது முதல் கட்டமாக மாமல்லபுரம் பூஞ்சேரி, சாவடி, பையனூர், வடகடம்பாடி பெருமாளேரி, கடம்பாடி, குன்னத்தூர் உள்ளிட்ட இடங்களில் ரெயில் பாதை, ரெயில் நிலையங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டிய பகுதிகளில் தென்னக ரெயில்வே என்று பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற அடையாள கற்கள் நடப்பட்டது. 2008-2009-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, 2011-ம் ஆண்டில் கடைசி மாதம் டிசம்பர் வரை ரெயில் பாதை திட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. பின்னர் இத்திட்டம் எந்தவித முன் அறிவிப்பும், காரணமும் தெரிவிக்காமல் கிடப்பில் போடப்பட்டது.

மாமல்லபுரத்தை சேர்ந்த கருப்பசாமி:-

வளர்ந்து வரும் சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு தென் மாநிலம் மட்டுமின்றி, வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பஸ், வேன் போன்ற வாகனங்கள் மூலம் வருகின்றனர். கிடப்பில் போடப்பட்ட மாமல்லபுரம்-கடலூர் ரெயில் பாதை திட்டத்தை மீண்டும் செயல்படுத்தினால் பஸ் பயணங்களில் வரும் சுற்றுலா பயணிகளின் சிரமம் குறையும்.

குறிப்பாக மீனவர்கள் அதிகம் வாழும் கிழக்கு கடற்கரை சாலையில் அப்பகுதிகள் மென்மேலும் வளர்ச்சி பெறும். கடலில் இருந்து பிடித்து வரப்படும் மீன்கள் பார்சல் ரெயில்கள் மூலம் எளிதாக பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கு கிழக்கு கடற்கரை சாலை ரெயில் திட்டம் பயன்தரும்.

மாமல்லபுரத்தை சேர்ந்த திராவிடமணி:-

இந்த கிழக்கு கடற்கரை சாலை ரெயில்வே திட்டம் செயல்படுத்தினால் மாமல்லபுரம் சுற்றுலா தலம் மட்டுமின்றி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வட நெம்மேலி முதலைப்பண்ணை, பாம்பு பண்ணை, முட்டுக்காடு படகுதுறை, பழமை வாய்ந்த கோவளம் தர்கா, முதலியார்குப்பம் படகுதுறை, புலிக்குகை புராதன சின்னம் மற்றும் ஏராளமான பொழுது போக்கு மையங்கள் மேலும் வெளிச்சம் பெறும்.

குறிப்பாக பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர இந்த கிழக்கு கடற்கரை சாலை ரெயில் வசதி பயனுள்ளதாக இருக்கும். தற்போது தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் செங்கல்பட்டு சென்று ரெயிலில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மாமல்லபுரத்தை சேர்ந்த குடும்ப தலைவி மாலதி:-

எப்போதும் இந்திய அளவில் வெளிநாட்டு பயணிகள் வருகையில் டெல்லி ஆக்ராவில் உள்ள தாஜ்மகால்தான் முதலிடத்தில் இருந்து வந்தது. அந்த சாதனையை சமீபத்தில் மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட இங்குள்ள புராதன சின்னங்கள் முறியடித்து முதலிடத்துக்கு வந்தது. காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று சின்னங்கள் இடம் பெற்றுள்ள மாமல்லபுரம் பகுதிக்கு இதுவரை ரெயில் வசதி இல்லை. எனவே இந்த இ.சி.ஆர். ரெயில் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சதுரங்கப்பட்டினத்தை சேர்ந்த ரேவதி:-

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, ஆந்திரா, அரியானா, பீகார் போன்ற வட மாநிலங்களை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ரெயில்வே திட்டத்தை செயல்படுத்தினால் இவர்கள் தங்கள் செர்ந்த ஊர்களுக்கு சென்றுவர பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் சதுரங்கப்பட்டினம் டச்சு கோட்டையை சீரமைத்து மேம்படுத்தி, இந்த கிழக்கு கடற்கரை சாலை ரெயில் பாதை திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். அதனால் பல்வேறு வழிகளில் இந்த பகுதிகள் வளர்ச்சி பெறும்.

மாமல்லபுரத்தை சேர்ந்த விஜய்:-

பொதுவாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் பொழுது போக்கு மையங்களுக்கு வார விடுமுறை தினங்களில் இ.சி.ஆர். சாலையில் வரும் வாகனங்களால் விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. இந்த கிழக்கு கடற்கரை சாலை ரெயில்வே திட்டம் கொண்டு வந்தால் வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம். எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி வரை நீண்ட ரெயில்பாதை வழித்தடம் போல் இந்த இ.சி.ஆர். சாலையின் சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரி- கடலூர் வழித்தடமும் சிறப்பு பெறும். குறிப்பாக தகவல் தொழில் நிறுவனங்கள் உள்ள ராஜீவ்காந்தி சாலையும் (பழைய மாமல்லபுரம் சாலை) வளர்ச்சி பெறும்.

மத்திய அரசு கொண்டு வருமா?

தற்போது மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள பகுதிகள் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று விரிவடைந்து மக்கள் தொகை அதிகரித்து வருவதால் மக்களின் பயண தேவைக்கு கிழக்கு கடற்கரை சாலை ரெயில் பாதை திட்டத்தை மீண்டும் மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்றும், அதனால் இந்த பகுதியில் உள்ள புகழ் பெற்ற இடங்கள் மேலும் வளர்ச்சி பெறும் என்றும், அதனால் மத்திய, மாநில அரசுக்கு கூடுதல் அன்னிய செலவாணி வருவாயும் அதிகம் கிடைக்கும் என்றும் பல்வேறு கருத்துக்களை மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்