குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-11 19:58 GMT

அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஊராட்சியில் குண்டு்ம், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பிரியும் ஏரிப்புறக்கரை செல்லும் தார்ச்சாலை உள்ளது. இந்த சாலையை அதிக அளவில் மீனவ மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் தினமும் லாரி, டிராக்டர், கார், வேன், ஆட்டோ, பள்ளி வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

மேலும் சாலையில் ஜல்லிகற்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர்.

மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது.

சீரமைக்க வேண்டும்

அதிராம்பட்டினத்தில் இருந்து ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் வரை செல்வோரும், ஏரிப்புறக்கரை கிராமத்திலிருந்து கடலுக்கு மீன் பிடித்துவிட்டு திரும்பும் மீனவர்கள் மீன்களை அதிராம்பட்டினம் மார்க்கெட்டுக்கு கொண்டு வருவதுக்கும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக உள்ள அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஊராட்சி சாலையை சீரமைத்து தர வேண்டும் என அந்தபகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி மீனவர்கள் கூறுகையில், அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை, கீழத்தோட்டம், கிராமத்தில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பல லட்சம் ரூபாய் மதிப்பில் தினமும் வணிகம் நடக்கும் இந்த பகுதியில் போதிய அளவு சாலை வசதி இல்லாததால் மீன் கொள்முதலுக்கு வரும் வியாபாரிகள் சாலை பள்ளங்களில் விழுந்து காயமடைவது வேதனையாக உள்ளது. குண்டும், குழியுமான சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்