பனை தொழில் புத்துயிர் பெறுமா? தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

பனை தொழில் புத்துயிர் பெறுமா? என தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2022-10-17 20:57 GMT

`கற்பக விருட்சம்' என்று அழைக்கப்படும் பனை மரம் நீண்ட காலம் உயிர் வாழும் அதிசயம் நிறைந்தது. தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமை பெற்றது பனை. மரத்தில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் பயன் உள்ளதே.

'இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற வாசகம் நடமாடும் கருத்த யானைக்கு மட்டுமல்ல, என்றும் நிலையாக கருத்து உயர்ந்து நிற்கும் பனைமரத்துக்கும் பொருந்தும். 30 மீட்டர் வரை உயர்ந்து வளரும் வலுப்பெற்றது, இந்த மரம்.

90 வகை பொருட்கள்

உச்சி முதல் வேர் வரை அனைத்து பாகங்களும் பலன் தரக்கூடிய மரம் என்றால் அது பனை மரம்தான். இந்தியாவில் 8½ கோடி பனை மரங்கள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடியே 10 லட்சம் பனைமரங்கள் வளர்ந்து நிற்கின்றன.

பனையில் இருந்து 90 வகையான உப பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பெற்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

வெட்ட தடை

இத்தகைய பயன்களை கொண்ட பனைகள் கடும் வறட்சி காரணமாகவும், பலத்த சூறாவளி காரணமாகவும் அழிந்து வந்தன. மக்கள் பல்வேறு தேவைகளுக்காக மரங்களை வெட்டியதாலும் அழிந்தன. இதனால் பனை மரங்களை நம்பி வாழும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

பனை மரங்கள் வேகமாக அழிந்து வருவதை கண்ட தமிழக அரசு பனை மரங்களை வெட்ட தடை விதித்தது. அதே நேரத்தில் பனை விதைகளை நடவு செய்து அவற்றை வளர்ப்பதிலும் தன்னார்வலர்கள் தற்போது வேகம் எடுத்து உள்ளனர். இதனால் பனை தொழில் புத்துயிர் பெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நெல்லை-தூத்துக்குடி

தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பரவலாகவும், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் பனை மரங்கள் உள்ளன. மாநில மொத்த பனை எண்ணிக்கையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 59 லட்சத்து 84 ஆயிரம் பனை மரங்களும், நெல்லை மாவட்டத்தில் 39 லட்சத்து 96 ஆயிரம் பனை மரங்களும் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவருகிறது.

நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, சேரன்மாதேவி, பாளையங்கோட்டை புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் பனை ஏறும் தொழிலாளர்கள் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இருந்தனர். தற்போது தொழிலை கைவிட்டு மாற்று தொழிலுக்கு மாறி விட்டார்கள். மும்பை, சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கு சென்று வேலை, தொழில் செய்து வருகிறார்கள்.

காரணம் என்ன?

இந்த தொழில் ஆண்டுக்கு 5 மாதங்கள் மட்டுமே இருக்கும். (அதில் 3 மாதங்கள் சிறப்பாக இருக்கும். 2 மாதங்கள் குறைவாகத்தான் பதனீர் கிடைக்கும்). மீதமுள்ள 7 மாதங்கள் பனை தொழிலாளர்கள் மாற்று வேலையை தேடி செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.

அதனால் பிள்ளைகளுடைய படிப்பிற்கோ, குடும்ப வாழ்வாதாரத்திற்கோ தேவையானபொருளாதாரமும் கிடைப்பதில்லை. இந்த தொழில் நலிவடைவதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும். எனவே பனை வளர்ப்பை அதிகரித்து, பனை தொழிலையும் மேம்படுத்த வேண்டும் என்று தொழிலாளர்கள், தன்னார்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

பனை விதைகள் நட வேண்டும்

தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் கென்னடி:-

நாங்கள் 2018-ம் ஆண்டு முதல் பனை விதை நடும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். புயல், மண் அரிப்பை தடுக்கும் வகையில் கடலோர பகுதி, கரையை பலப்படுத்தும் வகையில் ஆற்றங்கரை, குளத்தங்கரை, வாய்க்கால் கரைகளிலும், சாலை ஓரம், அரசு புறம்போக்கு நிலங்கள், விருப்பம் உள்ள தனியார் நிலங்களிலும் பனை விதை நட்டு உள்ளோம். இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 69 லட்சத்து 97 ஆயிரத்து 439 பனை விதைகள் நட்டு உள்ளோம். பனைகள் வெட்டப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உப்பு நீராக மாறிவிடுகிறது. இதனை தடுக்க அதிக பனை விதைகளை நட வேண்டும்.

முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையை சேர்ந்த தன்னார்வலர் எட்வின் ஹென்றி:-

தன்னார்வ அறக்கட்டளை சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக பனை விதைகளை விதைத்து வளர்த்து வருகிறோம். பனை விதைப்போம் திருவிழா மூலம் 63 ஆயிரம் பனை விதைகளை நட்டு பாதுகாத்து வருகிறோம். இந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரம் பனை விதைகளை விதைக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். கடந்த 6 ஆண்டுகளாய் பனை விதைகளை தாளார்குளம் அருகில் இருக்கும் திருப்புடைமருதூர் கோவில் நிலத்தில் நடவு செய்து உள்ளோம். பனை விதைகளை அதிகம் விதைத்து வளர்க்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

நவீன கருவிகள்

கடையநல்லூர் தாலுகா வேலப்பநாடானூரை சேர்ந்த பனைத்தொழிலாளி ஜோதி மாரியப்பன்:-

எங்கள் ஊரான வேலப்ப நாடானூரில் 300-க்கும் மேற்பட்டோர் பதனீர் வியாபாரம் மற்றும் பனையேறும் தொழில் செய்து வருகிறோம். எங்களது ஊர் அருகில் உள்ள கடையாலுருட்டியில்400-க்கும் மேற்பட்ட பனை தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது தென்காசி மாவட்டத்தில் பதனீர் சீசன் தொடங்கி இருக்கிறது.

பனைத்தொழில் செய்வதற்கு தற்போது இளைஞர்கள் முன்வருவதில்லை. காரணம் நாங்களே பனையில் இருந்து பதனீர் இறக்கி நாங்களே விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. எல்லா தொழிலுக்கும் நவீன கருவிகளை கண்டுபிடித்து உள்ள அரசு மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பனையேறுவதற்கு இன்னும் சரியான கருவிகளை கண்டுபிடிக்கவில்லை.

மேலும் வெளியூர்களுக்கு சென்று விற்பனை செய்கின்றபோது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு வித லைசன்ஸ் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். பனைத்தொழிலை ஊக்கப்படுத்துவதற்கு அரசு மானிய விலையில் பனை ஏறுவதற்கான கருவிகளை வழங்க வேண்டும். பனை நல வாரியத்தால் ஓய்வூதியமாக 60 வயது கடந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் தற்போது கொடுக்கிறார்கள். இந்த ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் ஆக உயர்த்தப்பட வேண்டும்.

பயிற்சி வகுப்பு

தென்காசி அருகே உள்ள அகரக்கட்டை சேர்ந்த ஸ்டீபன் செல்வராஜ்:-

நான் 25 ஆண்டுகளாக பனை ஏறி வருகிறேன். தற்போது தென்காசி மாவட்டத்தில் ராயகிரி, ராமநாதபுரம், சுப்பிரமணியபுரம், புளியங்குடி, சிந்தாமணி, அகரக்கட்டு, ஆலங்குளம், தாழையூத்து, கடங்கநேரி, கடையம் போன்ற பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை தொழிலாளர்கள் உள்ளனர்.

பதனீர், கருப்பட்டி மற்றும் இதிலிருந்து பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கு கிராமங்கள்தோறும் அரசு சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். பதனீர் மற்றும் கருப்பட்டியை பால் கொள்முதல் செய்வது போல அரசே கொள்முதல் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்ட தலைநகர், முக்கிய இடங்களில் அரசு சார்பில் பனை பொருள் விற்பனை நிலையம் தொடங்க வேண்டும்.

பனை ஓலை மற்றும் பனையில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு கலைப்பொருட்கள் தயாரிப்பதற்கு அரசு மானிய விலையில் கடன் வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

சபாநாயகர் முயற்சி

பனை மரங்களை வெட்ட தடை விதித்து, அவற்றை வளர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆதரவு கரம் நீட்டி உள்ளார். அவர் பனை விதைகளை நடவு செய்வது குறித்து சட்டமன்றத்தில் பேசியபோது, சபாநாயகர் அப்பாவு தனது பங்களிப்பாக ஆண்டுக்கு 1 லட்சம் பனை விதைகள் கொடுப்பதாக கூறினார்.

அதன்படி கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சம் பனை விதைகளை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு லாரிகளில் கொடுத்தனுப்பி கலெக்டர்கள் மேற்பார்வையில் நடவு செய்து உள்ளார். பல ஆயிரம் பேருக்கு வாழ்வாதாரம் அளித்த பனை தொழில் புத்துயிர் பெற தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்