திருமாநிலையூரில் இருந்து ராயனூர் செல்லும் குறுகிய சாலை அகலப்படுத்தப்படுமா?

போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி நடக்கும் விபத்துகளை தடுக்க திருமாநிலையூரில் இருந்து ராயனூர் செல்லும் குறுகிய சாலை அகலப்படுத்தப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.;

Update: 2023-01-02 18:38 GMT

பரபரப்பாக காணப்படும் சாலை

கரூர் மாவட்டம், திருமாநிலையூரில் இருந்து ராயனூர் வழியாக கோடங்கிபட்டி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கரூரில் இருந்து ஈசநத்தம் மற்றும் திண்டுக்கல் வரை செல்லக்கூடிய சாலையாக உள்ளது. இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து கரூருக்கு வேலைக்காகவும் பிற பயன்பாட்டிற்காகவும் வந்து செல்கின்றனர்.

இந்த சாலை வழியாகவே கரூர் நகருக்குள் உள்ளே நுழைய முடியும். இந்நிலையில் தினமும், நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள் மற்றும் கனரக வாகனங்கள், கார்கள், பஸ்கள் இச்சாலை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இச்சாலை எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும்.

விபத்துகள் ஏற்பட வாய்ப்பு

இந்தசாலை மிகமிக குறுகலாக உள்ளதால் கனரக வாகனங்கள் செல்லும்போது எதிரே வரும் மற்ற வாகனங்கள் சாலையில் ஒதுங்க முடியாமல் மிகவும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. அதுவும் காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்துவதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் அதிக விபத்துகள் ஏற்பட்டு உள்ளது.

தற்போது திருமாநிலையூர் பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் வரும் காலங்களில் இந்த சாலையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகும். எனவே சாலையின் இருபுறங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த கரூர் மாநகராட்சி கூட்டத்தில் கூட இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து நெரிசல்

கோடங்கிபட்டியை சேர்ந்த சதீஷ்:-

திருமாநிலையூரில் இருந்து ராயனூர் செல்லும் சாலை குறுகலான சாலையாக உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் செல்லும்போது அணிவகுத்து நிற்பதை காண முடிகிறது. இதனால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு சாலையை அகலப்படுத்த வேண்டும்.

காத்து கிடக்கும் நிலை

சின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த சேதுராமன்:-

திருமாநிலையூரில் இருந்து ராயனூருக்கு பிரிந்து செல்லும் சாலை மிக குறுகலாக உள்ளது. இச்சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக அளவிலான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த சாலையில் உள்ள வளைவு பகுதிகளில் பஸ்களை திரும்பி ஆட்களை ஏற்றி இறக்கும்போது, பின்னால் வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்து கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையின் இருபுறங்களிலும் உள்ள சாக்கடை கால்வாய்களை அப்புறப்படுத்தி சாலைகளை அகலப்படுத்த வேண்டும்.

புதிய பஸ் நிலையம் திறக்கப்பட...

தாந்தோணி மலையை சேர்ந்த பன்னீர்செல்வம்:-

திருமாநிலையூரில் இருந்து ராயனூர் செல்லும் சாலை மிக குறுகியதாக இருக்கிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் திருமாநிலையூரில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளதால் போக்குவரத்தும் அதிகமாக இருக்கும். இதற்கு முன்பாகவே இச்சாலையை விரிவுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்