வெட்டன் விடுதி பகுதியில் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

வெட்டன்விடுதி பகுதியில் முறையான சாலை வசதி, ஆரம்ப சுகாதார நிலையம், தனி வருவாய் சரகம் உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-06-27 18:09 GMT

வெட்டன்விடுதி கிராமம்

கறம்பக்குடி அருகே ஆலங்குடி பிரதான சாலையில் வெட்டன் விடுதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி கணக்கன்காடு, முள்ளங்குறிச்சி, பொன்னன்விடுதி, வாணக்கன்காடு உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளன. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

வாரம்தோறும் சனிக்கிழமை இங்கு நடைபெறும் ஆடு மற்றும் கோழி சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். இப்பகுதியில் 2 அரசு மேல்நிலைப்பள்ளி, 5 நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், கால்நடை மருத்துவமனை போன்றவை உள்ளன.

கோரிக்கை

வெட்டன்விடுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோல் கிராம சாலைகளை மேம்படுத்த வேண்டும், மழையூரில் இருந்து பிரித்து வெட்டன் விடுதியை மையமாக கொண்டு தனி வருவாய் சரகம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

இந்த அடிப்படை தேவைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

ஆரம்ப சுகாதார நிலையம்

வெட்டன் விடுதியை சேர்ந்த மலையப்பன்:- வெட்டன்விடுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பது 30 ஆண்டுகளுக்கு முந்தைய கோரிக்கை. இதற்காக 1991-ம் ஆண்டில் பொதுமக்களின் பங்கு தொகையாக ரூ.10 ஆயிரத்தை அரசுக்கு செலுத்தி உள்ளோம். ஆனால் பலமுறை முயற்சித்தும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கர்ப்பிணிகள், முதியவர்கள், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொடர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள் பெரும் சிரமப்படுகின்றனர். பஸ் வசதி இல்லாத வாணக்கன்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லவேண்டி இருப்பதால் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறமுடியாத நிலை உள்ளது. எனவே விரைவில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட வேண்டும்.

தனி வருவாய் சரகம்

பொன்னன் விடுதியை சேர்ந்த ரெங்கசாமி:- கறம்பக்குடி தனி தாலுகாவாக உருவாக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கறம்பக்குடி, மழையூர் என 2 வருவாய் சரகங்கள் மட்டுமே தொடர்ந்து உள்ளன. இதனால் வருவாய் ஆய்வாளரிடம் சான்றிதழ் பெறுவதற்கு எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் மழையூர் செல்லவேண்டிய நிலை உள்ளது.

வெட்டன்விடுதி பகுதியில் 6 பெரிய ஊராட்சிகள் உள்ளன. விவசாயம் நிறைந்த பகுதி. நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் இப்பகுதியில் உள்ளனர். வருவாய் ஆய்வாளர் சான்றிதழ் பெறுவதற்காக விவசாயிகள், மாணவர்கள், முதியவர்கள் அலைந்து திரியவேண்டி உள்ளது. எனவே வெட்டன்விடுதியை தலைமையிடமாக கொண்டு தனி வருவாய் சரகம் அமைக்க வேண்டும்.

சாலை, பஸ் வசதி

பொன்னன்விடுதி முருகேசன்:- வெட்டன்விடுதியை சுற்றி உள்ள பல கிராமங்களுக்கு இன்னும் முறையான சாலை மற்றும் பஸ் வசதி கிடையாது. குறிப்பாக பொன்னன் விடுதி சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதேபோல் பல கிராமச் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. பொன்னன் விடுதி, கருப்பகோன்தெரு, கணக்கன் காடு உள்ளிட்ட கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லை.

இதனால் இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலைகளை சீரமைத்து கிராமங்களுக்கு பஸ் வசதிசெய்து தர வேண்டும். பொன்னன் விடுதி பாசன குளம் உள்ளிட்ட பல குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. எனவே மழைக்காலம் தொடங்குவதற்குள் இந்த குளங்களை தூர்வார வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்