குடிநீர் கட்டணத்தை உயர்த்தும் முடிவு நிரந்தரமாக கைவிடப்படுமா?-நெல்லை மாநகர மக்கள் கருத்து

குடிநீர் கட்டணத்தை உயர்த்தும் முடிவு நிரந்தரமாக கைவிடப்படுமா? என்பது பற்றி நெல்லை மாநகர மக்கள் கருத்து தெரிவித்தனர்.

Update: 2023-01-11 18:45 GMT

நெல்லை மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமாக தாமிரபரணி ஆறு அமைந்துள்ளது. இங்கு கொண்டாநகரம், கருப்பந்துறை, மணப்படை வீடு உள்ளிட்ட பகுதிகளில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டு மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ரூ.295 கோடியில் புதிய திட்டம்

இதுதவிர தற்ேபாது முக்கூடல் அருகே தாமிரபரணி ஆற்றில் அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து 50 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுத்து மாநகர பகுதி மக்களுக்கு வினியோகம் செய்ய ரூ.295 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஜெர்மனி வங்கி நிதி உதவியுடன் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மணப்படைவீடு ஆற்றில் இருந்து பாளையங்கோட்டை பகுதிக்கு புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவும் ஏற்பாடு நடந்து வருகிறது.

குடிநீர் கட்டணம்

இதையொட்டி தமிழ்நாடு நகர்ப்புற உள் கட்டமைப்பு நிதி சேவை கழகம் குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை மற்றும் குடிநீர் கட்டணங்களை 5 சதவீதம் உயர்த்துமாறு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தின் தலைமை பொறியாளர் குடிநீர் கட்டணத்தை உயர்த்த உத்தரவிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து நெல்லை மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் கட்டணம் மற்றும் வைப்பு தொகையை உயர்த்த முடிவு செய்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

கட்டண விவரம்

அந்த தீர்மானத்தில் 'வைப்பு தொகை' வீடுகளுக்கு ரூ.6,500-ல் இருந்து கட்டிடத்தின் பரப்பளவு அடிப்படையில் உயர்த்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, 500 சதுர அடி வரை உள்ள வீடுகளுக்கு ரூ.7,500, வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ரூ.15 ஆயிரம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

501 சதுர அடி முதல் 1,200 சதுர அடி வரை உள்ள வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம், மற்றவற்றுக்கு ரூ.20 ஆயிரம்,

1,201 சதுர அடி முதல் 2,400 சதுர அடி வரை உள்ள வீடுகளுக்கு ரூ.12,500, மற்றவற்றுக்கு ரூ.25 ஆயிரம்,

2,401 சதுர அடிக்கு மேல் உள்ள வீடுகளுக்கு ரூ.15 ஆயிரம், மற்றவற்றுக்கு ரூ.30 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இதுதவிர குடிநீர் பயன்பாட்டு அடிப்படையிலும் கட்டணங்கள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி குறைந்தபட்ச கட்டணமாக ரூ.150 முதல் ரூ.480 வரை கட்டணமாக கொண்டு வரப்பட இருந்தது.

கைவிடப்படுமா?

இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மாநகராட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

எனவே, மீண்டும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுமா? அல்லது கைவிடப்பட்டு தற்போதுள்ள குடிநீர் கட்டணம், வைப்பு தொகை மட்டுமே வசூலிக்கப்படுமா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குடிநீர் கட்டண உயர்வு முடிவு நிரந்தரமாக கைவிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடம் எழுந்துள்ளது.

இதுகுறித்து நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

துன்புறுத்தும் செயல்

தியாகராஜ நகர் குடியிருப்போர் அபிவிருத்தி நலச்சங்க தலைவர் வாகை கணேசன்:-

நெல்லை மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிதண்ணீருக்கான கட்டணம் உயர்த்த வேண்டும் என்று அரசும், நகராட்சி நிர்வாக துறையும், நெல்லை மாநகராட்சியும் முடிவு எடுத்தது மக்களை துன்புறுத்தும் செயலாகும்.

அதுவும் கட்டிடத்தின் அளவு அடிப்படையில் குடிநீர் கட்டணம் நிர்ணயம் செய்வது தவறான செயல் ஆகும்.

500 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டுக்கும், 5 ஆயிரம் சதுர அடி வீட்டுக்கும், 200 சதுர அடி வணிக நிறுவனத்துக்கும், 10 ஆயிரம் சதுர அடி வணிக நிறுவனத்திற்கும் ஒரே அளவு தண்ணீர் தான் வழங்கப்படுகிறது.

நிலத்தடி நீர்

பொதுமக்கள் ஒவ்வொரு வீடுகளிலும் நிலத்தடி நீர் ஆதாரத்தை அடிப்படையாக வைத்து தான் தண்ணீரை செலவழித்து வருகிறார்கள். மாநகராட்சி தண்ணீரை குடிப்பதற்கு மட்டும் தான் பயன்படுத்தும் நிலை உள்ளது.

பொதுமக்கள் குடிக்கும் தண்ணீருக்கு 'மினரல் வாட்டர் கேன்' விலையில் மாநகராட்சி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டால், பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சி குடிதண்ணீரை எதிர்பார்க்காமல் அதே வரி விதிப்புக்கு உண்டான தொகையை வைத்து மினரல் வாட்டர் வாங்கியே பயன்படுத்தலாம் என்ற முடிவை எடுத்து விடுவார்கள்.

தியாகராஜ நகர் பகுதியில் பாதி தெருக்களுக்கு சரியாக குடிநீர் வழங்கப்படவில்லை. 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தான் குடிநீர் வழங்கப்படுகிறது. எனவே, புதிய குடிநீர் வரிவிதிப்புக்கு தியாகராஜ நகர் குடியிருப்போர் அபிவிருத்தி நல சங்கத்தின் சார்பாக எங்களது எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.

போராட்டம் நடத்துவோம்

நெல்லை கொக்கிரகுளத்தை சேர்ந்த துரைப்பாண்டியன்:-

தமிழகத்தில் சொத்து வரி மற்றும் மின் கட்டணம் அடுத்தடுத்து உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி குடிநீர் கட்டணத்தையும் உயர்த்தினால் அது பொது மக்களை பாதிக்கும்.

குறிப்பாக நெல்லை மாநகர பகுதியில் பலர் வாடகை வீடுகளில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த குடிநீர் கட்டணம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசு இதில் தலையிட்டு குடிநீர் கட்டணத்தை உயர்த்தும் முடிவை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

மறுபரிசீலனை வேண்டும்

வண்ணார்பேட்டையை சேர்ந்த உடையார்:-

குடிநீர் கட்டணத்தை உயர்த்த கூடாது. மாநகராட்சி நிர்வாகம் இந்த கட்டணத்தை உயர்த்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் பொது மக்களிடம் கருத்து கேட்டு, அந்த கருத்துப்படியே முடிவு செய்ய வேண்டும். முதலில் பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். அடிப்படை வசதிகள் சரியாக செய்யவில்லை, குடிநீர் தொட்டிகள் சரியாக பராமரிக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது ஏன் குடிநீர் கட்டணத்தை உயர்த்த வேண்டும்?

பொதுமக்களுக்கு சுமை

நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநலச்சங்க தலைவர் முகமது அயூப்:-

குடிநீர் கட்டணத்தை உயர்த்தினால் அது பொதுமக்களுக்கு சுமையாக இருக்கும். எனவே, குடிநீர் கட்டணத்தை உயர்த்தும் முடிவை மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக கைவிட வேண்டும். மாநகராட்சி தண்ணீர் வழங்குவது ஒரு சேவை ஆகும். எனவே, குடிநீருக்கான கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பொது மக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்க வேண்டும்.

இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

எனவே, குடிநீர் கட்டணத்தை உயர்த்தும் முடிவை நிரந்தரமாக கைவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்