சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்படுமா?

சீர்காழி தென்பாதியில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-04-27 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி தென்பாதியில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ரேஷன் கடை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி வி.என்.எஸ். நகரில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் தென்பாதி வ.உ.சி தெற்கு தெரு, வடக்கு தெரு, கிழக்கு தெரு, திரு.வி.க தெரு, பசும்பொன் முத்துராமலிங்கனார் தெரு, தென்பாதி மெயின் ரோடு, குளத்து மேட்டுதெரு , மாரிமுத்து நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அரசு சார்பில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை,கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி வந்தனர்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் தரைத்தளம், மேற் கூறைகள் சேதம் அடைந்ததால் மழைக்காலங்களில் மழை நீர் உட்புகுந்து கட்டிடத்தில் இருந்த அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் சேதம் அடைந்தது.

சீரமைக்க வேண்டும்

இதனால் இந்த கடை திட்டை ரோட்டில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்திற்கு திடீரென்று மாற்றம் செய்யப்பட்டு அங்கு இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில் பொதுமக்கள் கடையில் முன்பு நின்று பொருள் வாங்குவதற்கு போதிய இட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதம் அடைந்த நிலையில் பூட்டி கிடக்கும் ரேஷன் கடையை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நீண்ட தூரம் செல்லவேண்டும்

இதுகுறித்து சீர்காழி 18 வது வார்டு பகுதியை சேர்ந்த டேவிட் வசந்த ராஜ் கூறுகையில், தென்பாதி வி.என்.எஸ். நகரில் ரேஷன் கடை செயல்பட்டது இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. தற்பொழுது ரேஷன் கடை எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத திட்டை ரோட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள், விதவைகள் உள்ளிட்டோர் பொருட்கள் வாங்க பிரதான சாலையை கடந்து நீண்ட தூரமுள்ள திட்டை ரோட்டில் உள்ள கடைக்கு சென்று வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஏற்கனவே செயல்பட்ட ரேஷன் கடை அனைத்து வார்டு மக்களுக்கும் மையமாக இருந்தது. எனவே அரசு சேதம் அடைந்த நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைத்து மீண்டும் அதே கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு வழங்கும் அரிசி ,சீனி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அனைவருக்கும் முழுமையாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்