ஆற்றுக்குள் இடிந்து கிடக்கும் சிமெண்டு தளங்கள் சீரமைக்கப்படுமா?

ஆற்றுக்குள் இடிந்து கிடக்கும் சிமெண்டு தளங்கள் சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-08 18:45 GMT

கூத்தாநல்லூர் அருகே பாலத்தின் கீழ் ஆற்றுக்குள் இடிந்து கிடக்கும் சிமெண்டு தளங்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பண்டுதக்குடி பாலம்

கூத்தாநல்லூர் அருகே பண்டுதக்குடி பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இணைப்பில் வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை சேமித்து வைப்பதற்காக மதகு மற்றும் தண்ணீர் திறப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவையான நேரங்களில் தண்ணீர் திறப்பதும், தேவையற்ற நேரங்களில் தண்ணீர் திறப்பதை நிறுத்தி மூடி வைக்கப்படும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில் தண்ணீர் திறந்து விடும் போது, தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பண்டுதக்குடி பாலம் கீழ்பகுதியில் பாலத்தோடு இணைத்து தரை தளங்கள் அமைக்கப்பட்டது.

இடிந்து கிடக்கும் சிமெண்டு தளங்கள்

இந்த தளங்கள் படிப்படியாக அமைக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் வேகம் குறைந்து தளங்களில் சென்று வருகிறது. இந்த நிலையில், பாலத்தோடு இணைத்து அமைக்கப்பட்ட தரை தளங்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆற்றுக்குள்ளேயே இடிந்து விழுந்து கிடக்கிறது. இதனால், அங்கு அமைக்கப்பட்ட பாலத்தின் மதகில் இருந்து தண்ணீர் திறக்கும் போது, தண்ணீர் வேகம் குறையாமல் தாறுமாறாக செல்கின்றன. இதனால் தண்ணீரின் வேகம் குறையாமல் செல்கின்ற போது, தரைதளங்கள் முழுமையாக சேதமடைந்த பாலமும் இடிந்து விழ வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

சீரமைத்து தர வேண்டும்

மேலும் ஆற்றுக்குள் இடிந்து விழுந்த தரைதளங்கள் முழுவதும் இடிந்து சேதம் அடையும் வாய்ப்புகள் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நடப்பாண்டில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக சேதமடைந்த தரைதளங்களை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்