மாவடிகுளத்துக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் முழுவதுமாக மீட்கப்படுமா?

மாவடிகுளத்துக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் முழுவதுமாக மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-07-24 20:08 GMT

கொட்டப்பட்டு குளம்

திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் கூட்டுறவு பால் நிறுவனம் அருகே கொட்டப்பட்டு குளம் உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த குளம் 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்டது. பல ஆண்டுகளுக்கு முன் இந்த குளத்தின் மூலம் பல ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. கொட்டப்பட்டு பாசன குளத்திற்கான ஆயக்கட்டு பகுதிகளும் இருந்தன.

கொட்டப்பட்டு குளத்திற்கு, காவிரியின் 17 கிளை வாய்க்கால்களில் ஒன்றான புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் குளவாய்ப்பட்டி அருகில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. வரத்து கால்வாய்கள் மூலமாக செம்பட்டு, வயர்லஸ் சாலை, விமான நிலைய ஊழியர் குடியிருப்பின் பின் பகுதி வழியாக இந்த வாய்க்கால் கொட்டப்பட்டு குளத்தை அடையும்.

பால்பண்ணை- கோளரங்கம்

கொட்டப்பட்டு குளம் நிரம்பியதும், குளத்தின் தண்ணீர் புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலம் வழியாக சாலையை கடந்து வாய்க்கால் மூலம் கொட்டப்பட்டு உள்பட பல கிராமங்களை கடந்து மாவடிக்குளத்தில் போய் சேரும். இவை அனைத்தும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட நீர் மேலாண்மை ஏற்பாடாகும். ஆனால் காலப்போக்கில் கொட்டப்பட்டு குளத்தின் பாசன பகுதிகளில் இருந்த விவசாய நிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறியதால் கொட்டப்பட்டு குளம் பெயரளவிற்கு தான் குளமாக உள்ளதே தவிர, தற்போது பாசனம் எதுவும் நடைபெறவில்லை. இதனால் கொட்டப்பட்டு குளத்தின் ஒரு பகுதி பல ஆண்டுகளுக்கு முன் அரசு தானியங்கி பணிமனைக்காக ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் ஆவின் பால் பண்ணை அமைப்பதற்காக கூட்டுறவு சங்கத்திற்கு ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் கோளரங்கம், அண்ணா அறிவியல் மையம் அமைப்பதற்காகவும் குளத்தின் மேட்டுப்பகுதி ஒதுக்கப்பட்டது. இப்படி கொட்டப்பட்டு குளத்தின் நீர்பிடிப்பு பகுதிகள் பல வகையில் பிரித்து கொடுக்கப்பட்ட பின்னர் குளத்தின் மற்ற பகுதியில் தண்ணீர் உள்ளது.

மழையால் நிரம்பிய குளம்

பாசனம் இல்லை என்பதால் கொட்டப்பட்டு குளத்திற்கு புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்படுவது இல்லை. ஆனால் ஏற்கனவே உள்ள வரத்து வாய்க்கால்கள் வழியாக மாத்தூர், குண்டூர், அய்யம்பட்டி, விமான நிலையம், செம்பட்டு, உடையாம்பட்டி, கே.கே.நகர், சுந்தர் நகர், அய்யப்பநகர், எல்.ஐ.சி காலனி, காந்திநகர், ஆர்.எஸ்.புரம், ஆர்.வி.எஸ். நகர், ஜே.கே.நகர், லூர்துநகர் உள்பட பல குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் அனைத்தும் கொட்டப்பட்டு குளத்திற்கு வருகின்றன. கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் கொட்டப்பட்டு குளம் நிரம்பியது. இதற்கு முன், 1999-ம் ஆண்டு, 2005-ம் ஆண்டு மற்றும் 2015-ம் ஆண்டுகளில் இதேபோல் பெருமழை பெய்த காலத்திலும் கொட்டப்பட்டு குளம் நிரம்பியது. குளம் நிரம்பியதால் அப்போது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த 2 குழுமிகளும் திறக்கப்பட்டு தண்ணீர் குறும்பாலத்தின் வழியாக கொட்டப்பட்டு வாய்க்காலில் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது குழுமியை திறக்க முடியாத அளவிற்கு அடைத்து விட்டனர்.

குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழைநீர்

அத்துடன் கொட்டப்பட்டு வழியாக மாவடிக்குளத்திற்கு செல்வதற்கான வாய்க்கால் அமைப்புகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக கொட்டப்பட்டு குளம் முழுமையாக நிரம்பி வழிந்தாலும் தண்ணீரை திறந்து விட வழி இல்லை. கடந்த ஆண்டு பெய்த மழையின்போது, குளம் நிரம்பியது. தண்ணீரை திறந்து விட வழி இல்லாததால் கோளரங்கத்தின் ஒரு பகுதியான அறிவியல் மையத்தை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் குளத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஜே.கே.நகர், ஆர்.எஸ்.புரம் பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்தது. இதனால், வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தின் கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்ற அப்போதைய கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தண்ணீர் செல்வதற்கு ஏற்ப பெயரளவில் இரவோடு இரவாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதே தவிர முழுமையாக அகற்றவில்லை. தற்போது, மீண்டும் அதே பகுதியில் ஆக்கிரமிப்புகள் உருவாகி விட்டன. குறிப்பாக அகலமான வாய்க்கால் அமைந்துள்ள நியூ கோல்டன் நகர், வெங்கடேஸ்வரா நகர், ஐஸ்வர்யா எஸ்டேட் விஸ்தரிப்பு பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

வாய்க்காலா? வடிகாலா?

இந்தநிலையில் திருச்சி மாநகராட்சி 2-வது வார்டு குழுவுக்கு உட்பட்ட 47-வது வார்டில் கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் மற்றும் ஐஸ்வர்யா நகர் விஸ்தரிப்பு பகுதியில் மழைநீர் வடிகால் இல்லாததால் ஜே.கே.நகர் பகுதி குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்து விடுவதாகவும், இதனால் புதிய மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் கட்ட வேண்டியது அவசியம் என்றும், அந்த பணியை மேற்கொள்ள ரூ.1 கோடியே 83 லட்சத்து 30 ஆயிரம் ஒதுக்கி கடந்த மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வாய்க்காலை மீட்பதற்கு பதிலாக, வடிகால் கட்டினால் அடுத்து பெய்யும் கனமழையின்போது, குளத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போது, தண்ணீர் செல்ல வழியின்றி, அப்பகுதி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளது. விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் குளம் நிரம்பும் முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிய மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா? என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தூர்வார வேண்டும்

மேலும் கொட்டப்பட்டு குளம் தற்போது சீமை கருவேல மரங்கள் மற்றும் மரங்கள் முளைத்து காடு போல் காட்சி அளிக்கிறது. இவற்றை எல்லாம் அப்புறப்படுத்தி தூர்வாரி குளத்தை ஆழப்படுத்தினால் இதனை மழைநீர் சேகரிப்பு பகுதியாகவும் மாற்றலாம். படகு குழாம் அமைத்து பொழுது போக்கும் இடமாகவும் மாற்றலாம். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொட்டப்பட்டு குளத்தை தூர்வாருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்