பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
கல்லூரிகளில் நிலவும் பேராசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை,
அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த பல ஆண்டுகளாக புதிய பேராசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படாத காரணத்தினால் அக்கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்களில் சுமார் 8 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், பெரும்பாலான அரசு கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் தொடர் சரிவை சந்தித்துக் கொண்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான பேராசியர்கள் இல்லாத காரணத்தினால் பாடத்திட்டத்திற்கு தகுந்த வகுப்புகள் முறையாக நடைபெறுவதில்லை எனவும், குறிப்பாக கிராமப்புற கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதாகவும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
போட்டித் தேர்வுகளின் மூலம் அரசு கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த தமிழக அரசின் உயர்கல்வித்துறை, அந்த அறிவிப்புக்கு பின் காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித முயற்சியும் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அக்கல்லூரிகளில் நிலவும் பேராசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.