ரூ.4 கோடியில் கட்டப்பட்டு வரும் புராதன பூங்கா விரைந்து திறக்கப்படுமா?
மலைக்கோட்டை அருகே ரூ.4 கோடியில் கட்டப்பட்டு வரும் புராதன பூங்காவை விரைந்து திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலைக்கோட்டை அருகே ரூ.4 கோடியில் கட்டப்பட்டு வரும் புராதன பூங்காவை விரைந்து திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புராதன பூங்கா
தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி மாவட்டம் பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டது. விஜயநகர பேரரசு, ஆங்கிலேயர்கள், முகலாயர்கள், பல்லவர்கள் என அனைத்து ஆட்சியின் கீழும் திருச்சி இருந்துள்ளது. திருச்சியில் உள்ள உறையூர் சோழர்களின் தலைநகராக விளங்கி வந்துள்ளது. சோழர்கள் ஆட்சிக்காலத்தில் தான் திருச்சி மாநகருக்குள் ஓடும் உய்யகொண்டான் வாய்க்கால் கட்டப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டையை சுற்றியுள்ள கோட்டை சுவர்கள், அரண்மனை, ராணிமங்கம்மாள் கொலுமண்டபம், மெயின்கார்டுகேட் நுழைவுவாயில் என திருச்சியின் முக்கிய பகுதிகளில் புராதன சின்னங்கள் நிறைந்து கிடக்கின்றன. ராணி மங்கம்மாள் கொலுமண்டபம் தற்போது அரசு அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திருச்சிக்கு வரும்போதெல்லாம் இந்த புராதன சின்னங்களை காண தவறுவதில்லை.
மன்னர்களின் சிலைகள்
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருச்சியில் மலைக்கோட்டைக்கு பின்புறமுள்ள பட்டவர்த்சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.4 கோடியில் புராதன பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1.27 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் புராதன பூங்காவில் காலங்காலமாக நகரின் துடிப்பான வரலாற்றை காட்டும் சுவரோவியங்கள் இடம் பெறுகின்றன. மேலும், இந்த பூங்காவில் ராஜராஜசோழன், கரிகால சோழன், ராணி மங்கம்மாள் ஆகியோரது சிலைகள் கம்பீர தோற்றத்துடன் நிறுவப்படுகிறது. இந்த சிலைகள் தமிழ்நாடு கைவினை பொருட்கள் மேம்பாட்டு கழகத்தால் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, 2 போர் வீரர்களின் சிலைகளுடன், 2 குதிரைகளின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்திலேயே குழந்தைகள் விளையாடுவதற்கு ஒரு பகுதி, பெரிய மூலிகை தோட்டம், கலாசார நிகழ்வுகளை நடத்தக்கூடிய ஒரு ஆம்பி தியேட்டர் உள்பட பல்வேறு அம்சங்களுடன் பூங்கா வடிவமைக்கப்படுகிறது. கார் `பார்க்கிங்' வசதி மற்றும் இருசக்கர வாகன `பார்க்கிங்' வசதி உள்ளிட்டவையும் கொண்டு வரப்படுகிறது.
இறுதிக்கட்ட பணிகள்
கடந்த 2019-ம் ஆண்டு இந்த பூங்கா கட்டுமான பணிகள் தொடங்கியது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. பின்னர் கொரோனா ஓய்ந்தபிறகு மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. பல்வேறு தாமதங்களுக்கு இடையே தற்போது பூங்காவில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது கோடை காலம் தொடங்கி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. திருச்சியில் குழந்தைகளுடன் சென்று பொழுதுபோக்குவதற்கு முக்கொம்பு சுற்றுலாத்தலத்தை தவிர, வேறு சரியான இடம் இல்லை என்பது திருச்சி நகர மக்களின் ஆதங்கமாக உள்ளது. இந்தநிலையில் திருச்சியில் ரூ.4 கோடியில் கட்டப்பட்டுள்ள புராதன பூங்காவை விரைந்து திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கலாசாரம்
பூங்கா திறக்கப்பட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சென்று கண்டுகளிக்கலாம். அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு நமது முன்னோர்களின் வரலாறுகளையும், கலாசாரத்தையும் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். பழங்கால கட்டிடக்கலையை நினைவுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வரும் இந்த புராதன பூங்கா திருச்சியின் அடையாளங்களுள் ஒன்றான மலைக்கோட்டை அருகே அமைக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
குண்டும், குழியுமான சாலை
ஆண்டாள்வீதியை சேர்ந்த ராம்குமார்:-திருச்சி மாநகரின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் மலைக்கோட்டை அருகே பட்டவர்த்சாலையில் புராதன பூங்கா அமைக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. ஆனால் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்க வேண்டும். ஏனென்றால் தற்போது பள்ளிகளில் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட உள்ளது. இதுபோன்ற இடங்களுக்கு கோடை விடுமுறையில் குழந்தைகளை அழைத்து சென்றால் அவர்களுக்கு பொழுது போக்காக இருப்பதுடன், நம்மை ஆண்ட முன்னோர்களின் கதைகளையும் எடுத்து கூற முடியும்.
தரமான சாலை
கீழஆண்டாள்வீதியை சேர்ந்த சுடலைமுத்து:-திருச்சியில் புராதன பூங்கா அமைத்து இருப்பது நல்ல விஷயம். ஆனால் அந்த பூங்காவுக்கு செல்லும் பட்டவர்த்சாலையை முதலில் சீரமைக்க வேண்டும். அந்த சாலை முழுவதுமே குண்டும், குழியுமாக கிடக்கிறது. மேலும் அந்த சாலையில் பறக்கும் புழுதியால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். அங்கு தரமான சாலை அமைக்கப்பட்டால் தான் குழந்தைகளை அழைத்து கொண்டு பெற்றோர் பூங்காவுக்கு செல்வார்கள். ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சாலை அமைக்கும் பணியை முதலில் தொடங்க வேண்டும்.
சிந்தாமணியை சேர்ந்த சண்முகம்:-திருச்சி பட்டவர்த்சாலையில் பல கோடி ரூபாய் மதிப்பில் புராதன பூங்கா கட்டப்பட்டுள்ளது. இந்த பூங்காவை எப்போது திறப்பார்கள் என பொதுமக்களாகிய நாங்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறோம். இந்த பகுதியில் ஏராளமான பள்ளி, கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. பூங்கா திறக்கப்பட்டால் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்து பார்த்துவிட்டு செல்வார்கள். மேலும், அந்த பகுதியில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய இடம் எதுவும் இல்லாததால், பூங்காவை விரைந்து திறக்க வேண்டும். குறிப்பாக விடுமுறை நாட்களில் நிறைய பேர் இந்த பூங்காவுக்கு வந்து செல்வார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.