பிளவக்கல் அணை பூங்கா மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?
பிளவக்கல் அணை பூங்கா மீண்டும் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.;
விருதுநகர் மாவட்டத்தில் எண்ணற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் பிளவக்கல் அணை.
பிளவக்கல் அணை
விருதுநகர் மாவட்டம் கடந்த 1985-ம் ஆண்டு உதயமான போது அப்போது கலெக்டராக இருந்த விஜயராகவன் பிளவக்கல் அணைப்பகுதியை சுற்றுலா தலம் ஆக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தார். அதனைத்தொடர்ந்து அரசு பொதுப்பணித்துறை மூலம் அணை பகுதியில் பூங்கா அமைத்தது. மீன்வளத்துறையினரும் இதற்காக உதவிக்கரம் நீட்டினர்.
இதனால் விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பூங்காவிற்கு வருகை தந்து நல்வழியில் பொழுதை கழிக்கும் நிலை ஏற்பட்டது.
பூங்கா மூடல்
இதன்மூலம் அப்பகுதியில் பலர் வாழ்வாதாரம் பெற்றனர். இந்தநிலையில் பிளவக்கல் அணைப்பகுதியில் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வந்த பூங்கா முறையான பராமரிப்பு இல்லாமல் சிதிலமடையத் தொடங்கியது. இதன் முத்தாய்ப்பாக கொரோனா காலத்தில் பூங்கா பூட்டப்பட்டது.
அதன் பின்னர் அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர எந்த துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதலால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அணை இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
சுற்றுலா தலம்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமானது பிளவக்கல் பெரியாறு அணை ஆகும்.
இந்த அணைப்பகுதியில் உள்ள பூங்கா பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டது. அணையை கண்டு ரசிக்க வருபவர்கள் தவறாமல் இந்த பூங்காவிற்கு செல்வது உண்டு. இங்கு எண்ணற்ற விளையாட்டு உபகரணங்களும்,
விளையாட்டு உபகரணங்கள்
பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்து காணப்பட்டது. தற்ேபாது ேபாதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. கொரோனா காலத்தில் பூட்டப்பட்ட பூங்கா மீண்டும் திறக்கப்படவில்லை. இதனால் விளையாட்டு உபகரணங்கள் நாளுக்கு நாள் சேதம் அடைந்து வருகின்றது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை அணையில் உள்ள பூங்காவினை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது அணைப்பகுதியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாததால் அணையை சுற்றி பார்ப்பதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. எனவே இந்த பூங்காவை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு திறந்து விட நடவடிக்கை எடு்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாதுகாப்பு நடவடிக்கை
இதுகுறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அன்பரசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
பிளவக்கல் அணை பகுதியில் பூங்கா பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்தநிலையில் கொரோனா காலத்தில் பூங்கா பூட்டப்பட்டது. அதன் பின்னர் அது பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனை பராமரிக்க வேண்டிய பொறுப்பு பொதுப்பணிதுறையிடம் தான் உள்ளது.
எனினும் மாவட்ட சுற்றுலா அதிகாரி என்ற முறையில் நான் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் தொடர்பு கொண்டு பூங்காவை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறினேன். அவர்களும் இதுகுறித்து அரசுக்கு நிதி ஒதுக்கீடு கோரி பரிந்துரை செய்துள்ளதாகவும் நிதி கிடைத்ததும் புனரமைக்கப்படும் என்றும் தெரிவித்தனர். தற்போதைய நிலையில் பிளவக்கல் அணை உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதி புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்டு விட்டதால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டி உள்ளது.
கலந்தாய்வு
பூங்காவுக்கு வரும் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்க அங்கு பாதுகாப்பு சுவரமைக்க வேண்டிய நிலையில் உள்ளது. எனவே வனத்துறையினரும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்களிடமும் கோரியுள்ளோம். அவர்களும் உயர் அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
எது எப்படியாயினும் பிளவுக்கல் பூங்கா மறுபடியும் பயன்பாட்டிற்கு வர அரசு அனுமதியுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிதி ஒதுக்கீடு
கொரோனா பாதிப்பு முடிந்து முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் பிளவக்கல் அணைப்பகுதியில் உள்ள பூங்காவை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினரும், மாவட்ட நிர்வாகத்திடமும், அரசிடமும் முறையிடப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நிதி ஒதுக்கீடு பெற வேண்டும்.
அந்த நிதியை கொண்டு பிளவக்கல் அணை பூங்கா பகுதியை புனரமைத்து மீண்டும் அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வனத்துறையினரும் புலிகள் சரணாலயம் என காரணம் கூறி கோரிக்கையை புறக்கணித்து விடாமல் பூங்கா புனரமைக்கப்பட தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அவர்கள் தரப்பில் செய்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரிய அணை
வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகள் மாவட்டத்திலேயே பெரிய அணைகள் ஆகும். இந்த அணைகள் மூலம் 40 கண்மாய்கள் பாசன வசதி பெறுகிறது.
தமிழ்த்தாய் சிலை சேதம்
பிளவக்கல் பெரியாறு அணையில் உள்ள பூங்கா உரிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இங்குள்ள கழிவறைகள், ஊஞ்சல், சறுக்கு போன்ற விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த பூங்காவில் உள்ள தமிழ்த்தாய் சிலையின் கைகள் சேதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. மேலும் பூங்காவிற்கு செல்லக்கூடிய சாலையும் கற்கள் பெயர்ந்து சுற்றுலா பயணிகள் நடக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே சாலையை சீரமைப்பதுடன், பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள், தமிழ்த்தாய் சிலை ஆகியவற்றையும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.