உயிருக்கு உலை வைக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் இடித்து அகற்றப்படுமா?

வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் உயிருக்கு உலை வைக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை இடித்து அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-28 18:39 GMT

நீர்த்தேக்க தொட்டிகள்

திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட வடகாடு சுற்று வட்டார பகுதி ஊர்களில் 10 ஆயிரம், 30 ஆயிரம், 60 ஆயிரம், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உள்ளன. இதில் பல குடிநீர் தேக்கத்தொட்டிகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. அத்தகைய தொட்டிகளில் இன்றளவும், அப்பகுதிகளில் உள்ள நீர்த்தேக்க ஆபரேட்டர்கள் மூலமாக குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அந்தந்த பகுதிகளில் உள்ள ஊராட்சி நிர்வாகம் மூலமாக நீர்த்தேக்க தொட்டிகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும் கூட சேதமடைந்த குடிநீர் தேக்க தொட்டிகளை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை எனவும் கூறப்படுகிறது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு மனித உயிருக்கு உலை வைக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை இடித்து அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

கட்டுமான பணிகள் நிறுத்தம்

தமிழ்மாறன்:- வடகாடு பரமநகர் பகுதியில் உள்ள குடிநீர் தேக்கத்தொட்டி சேதமடைந்ததால் அவற்றுக்கு பதிலாக புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் இந்த பணிகள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எனவே மனித உயிரிழப்பு ஏற்படும் முன்பு சேதமடைந்த குடிநீர் தேக்கத்தொட்டியை முழுமையாக அகற்றிவிட்டு அதற்கு பதிலாக புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி கூட்டு குடிநீர் திட்டம்

வடகாடு பகுதியை சேர்ந்த விவசாயி மதியழகன்:- ஒரு சில இடங்களில் ஆழ்குழாய் கிணறு நீர்மட்டம் குறைந்து போனதால், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில நேரங்களில் தண்ணீர் நிறம் மாறி வருகிறது. இவற்றையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து, பொதுமக்களுக்கு தூய தண்ணீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். பல்வேறு சிரமங்களுக்கு இடையே உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஆபரேட்டர்களின் ஊதியத்தை அதிகரித்து அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதோடு, குடிநீர் தேக்க தொட்டிகளை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

புதிய நீர்த்தேக்க தொட்டி

அனவயல் எல்.என்.புரம் பகுதியை சேர்ந்த கணேசன்:- எங்களது பகுதியில் மிகவும் சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் குடிநீர் தேக்கத்தொட்டி உள்ளது. அதனை இடித்து அகற்றி விட்டு அதற்கு பதிலாக புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இப்பகுதி மக்களின் நலன் கருதி புதிய நீர்த்தேக்க தொட்டியை கட்டித்தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் மிகவும் சொற்ப ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இரவு, பகல் என பாராமல் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை வினியோகம் செய்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் போதவில்லை என கூறி வருகின்றனர். எனவே இவர்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு முன்வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து வடகாடு பகுதியை சேர்ந்த நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டரான ராஜேந்திரன் கூறியதாவது:-

வீட்டிற்கு அருகிலேயே வேலை, அதுவும் அரசு பணி. ஊராட்சி நிர்வாகம் மூலமாக குறைந்த பட்ச ஊதியம் கிடைத்து வந்தாலும், அதனை கொண்டு பொருளாதார ரீதியாக வளர்ச்சி காண முடியவில்லை. இரவு, பகலாக குடிநீர் வினியோகம் செய்யும் பணியை தொய்வு இன்றி செய்து வருகிறோம். எனவே தமிழக அரசு எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்